300தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளது –சி.வி.விக்னேஸ்வரன்

கடந்த காலத்தில் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் தொடர்பில் கொண்டிந்த தவறான புரிதல்களே தமிழ்-முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுக்தோன்றுவதற்கு காரணமாக அமைந்ததாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முன்னைய காலத்தில் முஸ்லிம்கள் தங்களை தமிழர்கள் என்றே அழைத்துவந்ததாகவும் ஆனால் பின்னர் அவர்கள் தங்களை வேறுபடுத்திகாட்டமுற்பட்ட நிலையிலேயே தமிழ்-முஸ்லிம் மக்கள் பிரியும் நிலையேற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,களுவாஞ்;சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டட மகிழுர் கண்ணகிபுரத்தில் நேற்று சனிக்கிழமை மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தும் வகையிலும் மக்கள்பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையிலும் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதில் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன்,தமிழ் மக்கள் கூட்டணி கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.சிற்பரன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்னேஸ்வரன்,
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் இந்த நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.இந்த தாக்குதலின் பின்னர் பல்வேறு விதமான சிந்தனைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவருகின்றன.
தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஓருகாலத்தில் சகோதரத்துவம் நிலவிவந்தது.ஆனால் இன்று சந்தேக நிலமையே இருசமூகங்கள் மத்தியிலும் நிலவிவருகின்றது.ஒருகாலத்தில் முஸ்லிம்களும் தமிழ் மக்களும் பிட்டும் தேங்காய்ப்பூம் போல வாழ்ந்துவந்த நிலைதான் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் இருந்தது.
அண்மைக்காலமாக இந்த நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எங்களுடைய மக்கள் பல காரணங்களுக்காக தங்களுடைய காணிகளை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கும் வேறு இடங்களுக்கும் செல்கின்றனர். அந்தக்காணிகளை ஒரு இனத்தவர்கள் வாங்கிக்கொள்கின்றனர். ஆகையால் காணி சம்பந்தமான அவர்களுடைய உரிமைகள் விரிவுபடுகின்றன. எங்களுடைய காணி சம்பந்தமான உரிமைகள் குறைந்துகொண்டு வருகின்றன. இதைவிட வேறுசில நடவடிக்கைகளும் நடந்துவருகின்றன.
தற்போது தென்னிந்தியாவில் இருப்பதுபோன்று தமிழ் இந்து மக்களும் முஸ்லிம் மக்களும் கிறிஸ்தவர்களும் நாங்கள் யாவரும் தமிழர்கள் என்ற ஒரு சிந்தனையில் தான் இங்கும் வாழ்ந்துவந்தனர்.
அந்தக் காலத்தில் மசூர் மௌலானா அவர்கள் தமிழரசுக் கட்சியின் முக்கிய நபராக இருந்தவர். தந்தை செல்வாவினுடைய வலது கரம் என்றுகூட அவரைக் கூறலாம். அந்தக் காலத்தில் அவருடைய சிந்தனை நான் ஒரு தமிழன் என்றே இருந்தது. தமிழன் என்ற முறையில் தமிழ் மக்களோடு சேர்ந்து அவருடைய காரியங்கள் நடைபெற்றன.
அதன் பிறகு அஷ்ரப் அவர்கள் ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியோடு சேர்ந்துதான் அவருடைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் 1970,1971ஆம் ஆண்டுகளில் கம்பொலையிலிருந்து மத்திய கல்லூரியின் முதல்வர் பதுர்டீன் முகமட் ஒரு மந்திரியாக வந்ததன் பிற்பாடு முஸ்லிம் மக்களின் சிந்தனை வேறுபட்டது. நாங்கள் ஏன் தமிழ் மக்களோடு சேர்ந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராட வேண்டும், நாங்கள் ஒரு வித்தியாசமான மக்கள் குழுக்கள் என்ற எண்ணம் அவர்களுக்குள் உட்புகுந்தது.
தமிழரசுக் கட்சியோடு சேர்ந்து இயங்கி முன்னெழுந்துவந்த அஷ்ரப் கூட இந்த சிந்தனைக்குள் இழுக்கப்பட்டார். நாங்கள் தமிழ் மக்கள் என்ற எண்ணத்தை விட்டு முஸ்லிம்கள் சமய ரீதியாக மத ரீதியாக நாங்கள் வேறுபட்ட காரணத்தினால் மொழி ரீதியாக ஒன்றுபட்டவர்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எங்களுள் சிலர் சிங்களம் பேசுகின்றனர் சிலர் தமிழ் பேசுகின்றனர் சிலர் அரபு பேசுகின்றனர் எனவே நாங்கள் வேறொரு இனம் என்ற கருத்தை உட்புகுத்தினார்கள். ஆகயால் ஒருமித்திருந்த நாங்கள் அந்த காலகட்டத்தில் பிளவுபட ஆரம்பித்தோம்.
அந்த காலகட்டத்தில் தான் தமிழ் இளைஞர்கள் போராட ஆரம்பித்தனர். இந்தப் போராட்டத்தில் முதல் சில வருடங்களில் பல முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். காலஞ்செல்லச்செல்ல அவர்களிடையே நாங்கள் ஏன் இவர்களுடன் சேர்ந்து போராடி உயிரைவிடவேண்டும் என்றும் அரசாங்கத்துடன் சேர்ந்து எங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் என்ன என்ற அடிப்படையில் நாங்கள் வித்தியாசமான ஒரு இனம் என அவர்கள் கூறத்தொடங்கியதில் இருந்துதான் தமிழ், முஸ்லிம் மக்களின் உறவில் விரிசல் ஏற்படத்தொடங்கியது.
அதனை அரசாங்கமும் சரியா முறையில் பயன்படுத்தி சில காரியங்களை செய்துகொண்டதால் முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என தமிழர்கள் சிந்திக்கவும் தமிழர்கள் தான் செய்தனர் என முஸ்லிம்கள் சிந்திக்கவும் ஏற்ற வகையில் தமது இராணுவத்தை பயன்படுத்தி அரசாங்கம் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதன் காரணமாக தமிழ்,முஸ்லிம் உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டு தற்போதைய நிலையில் ஏப்ரல் 21ற்குப் பின்னர் முஸ்லிம் மக்களை நம்ப முடியாது என முழு இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. சில சிங்கள கிராமங்களில் எவருமே முஸ்லிம்களின் கடைகளுக்குச் செல்லாதிருக்கின்றனர். முஸ்லிம்களின் கடைகளுக்குச் செல்லாதீர்கள் என பௌத்த பிக்குகள் கூறியதனால் பெரிய பெரிய கடைகளுக்கோ ஸ்தாபனங்களுக்கோ சிங்கள மக்கள் செல்லாதிருக்கின்றனர். இவ்வாறான நிலை ஏற்பட்டதன் காரணமாக முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டிருக்கின்றது. இப்போதைய நிலையை நாங்கள் கணக்கில் எடுக்க வேண்டும்.
இதுவரை காலமும் முஸ்லிம் மக்கள் எங்களுடைய காணிகளை கொள்வனவு செய்தார்கள் அல்லது கபளீகரம் செய்தார்கள். இந்த இரண்டையும் நாங்கள் இனி விடக்கூடாது. எங்களுடைய தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செய்தால் கிழக்கு மாகாணத்தில் நாங்கள் இல்லாது போய்விடுவோம்.
வடகிழக்கு இணைப்பு ஏற்பட்டால் முஸ்லிம் மக்களுக்கு ஒரு மாகாணம் தரப்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறியதாக நேற்றைய பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு இணைப்பிலே முஸ்லிம்களுக்கு ஒரு அலகு வழங்கப்படவேண்டும் என எங்களுடைய கட்சி ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக்கொண்டிருக்கின்றது. ஆனால் முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கு இணைவதற்கு நாங்கள் எப்போதும் இடமளிக்க மாட்டோம் என்பதை கூறிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இப்பொழுது வடகிழக்கு இணைந்தால் முஸ்லிம்களுக்கு ஒரு மாகாணம் வழங்கப்படவேண்டும் என கூறியிருக்கின்றார். அவர்களுடைய சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட்டுவருவதை நீங்கள் பார்க்கலாம். வடக்கும் கிழக்கும் இணையவேண்டிய அவசியம் ஏற்படப்போகின்றதோ என அவர்கள் எண்ணுகின்றனர்.
வடக்கு கிழக்கு இணைந்தால் நாங்களும் தமிழ் மக்களோடு சேர்ந்து ஒரு விடயத்தில் இறங்கலாம், எனவும் பெரும்பான்மை இனத்தை நம்பி மற்றைய சிறுபான்மை இனத்தை நாங்கள் வெறுத்து ஒதுக்கியதன் காரணமாக இன்று பெரும்பான்மை இனத்தினுடைய கோபத்திற்கும் விசமத்தனங்களுக்கும் ஆளாகியிருக்கின்றோம் என்ற சிந்தனை முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களோடு சேர்ந்திருக்காது சிங்கள மக்களோடு சேர்ந்து இயங்கியதால் தான் இன்று கைவிடப்பட்டிருக்கின்றோம் என்ற சிந்தனை இருக்கின்றது.
தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான வித்தியாசம் யாதெனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முடிவின்போது யாழ்ப்பாணத்திலே முஸ்லிம்கள் வெடி கொளுத்தி பாற்சோறு உண்டனர். ஆனால் ஏப்ரல் 21ன் பின்னர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு தமிழர்கள் எவருமே அவ்வாறான சிந்தனைகளில் ஈடுபடவில்லை. அப்படியிருந்தும் கல்முனையில் எங்களுக்குரிய சில உரித்துக்களை தரமுடியாது தரக்கூடாது என்ற விதத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் கூறிக்கொண்டு வந்தனர். ஆனால் இப்பொழுது அவர்களுடைய மனதில் மாற்றங்கள் ஏற்பட்டுவருவதை நாங்கள் காண்;கின்றோம். இவ்வாறான மாற்றங்களுக்குக் காரணம் பிழையான சிந்தனைகளில் ஈடுபட்டு முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களில்; இருந்து பிரிந்து சென்றமையால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமான கஷ்டங்களுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டது. சுமார் 300தமிழ் கிராமங்கள் தமிழ் பெயரைக்கொண்ட கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக முஸ்லிம் பெயர்களைக்கொண்ட கிராமங்களாக மாறிவிட்டன.