ஹிஸ்புல்லா சந்தர்ப்பவாத அரசியல்வாதி - பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவை பொறுத்தவரையில் கட்சி மாறுவதில் அவர் வரலாறு படைத்தவர்.அவர் ஒரு விநோதமான சந்தர்ப்பவாத அரசியல்வாதியாவார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகின்றது.அதன் பின்னர் அவர் ஜனாதிபதியாக போட்டியிட்டாலும் சரி எந்த தேர்தலிலும் போட்டியிட்டாலும் அவர் வெல்லமுடியாது எனவும் இதன்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுவரும் இராஜகோபுரத்திற்கு கம்பிரலிய திட்டத்தின் ஊடாக 10இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனினால் இந்த நிதியொதுக்கீடுசெய்யப்பட்டது.

இந்த நிதியொதுக்கீட்டில் இராஜகோபுரத்திற்கான நிர்மாணப்பணிகள் நேற்று மாலை பாராளுமன்ற உறுப்பினரினால் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இலங்கையில் மிகவும் உயரமான இராஜகோபுரம் கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுவருகின்றது.

இந்த நிகழ்வில் ஆலய நிர்வாக சபையினர்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டிருப்பது நல்ல விடயமாகும். ஏனெனில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கையில் அது தொடர்பில் பகிரங்கமான விசாரணை நடத்தப்பட்டு உ:மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு இதுவொரு சந்தர்ப்பம் கிடைக்கின்றவகையில் இந்த பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி ஆணைக்குழு ஒருபக்கம் இருந்தால் பாராளுமன்ற தெரிவுக்குழுவும் இருக்க வேண்டும். பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சகல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அங்கத்துவம் பெறுவதற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் ஆளும்தரப்பின் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த மகிந்த அணியினர்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாங்களாகவே பாராளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து விலகிக்கொண்டனர். அது அவர்களின் எதிர்கால அரசியல் இலாபத்தோடு சம்பந்தப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கூறப்படுகின்ற விடயங்களைப் பார்க்கின்றபோது மக்கள் வெளிப்படையாக தெரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றது. ஜனாதிபதி அவர்கள் மாறுபட்ட கருத்துகளை கூறுகின்றார். அவர் பல்வேறுபட்ட கோணத்தில் தன்னுடைய அரசியல் போக்கை காட்டுகின்றார். ஜனாதிபதி தேர்தலின் பின்பு நான் தோற்றிருந்தால் ஆறடி நில மண்ணின் கீழ் மகிந்த ராஜபக்ச அவர்கள் தன்னை அடக்கம் செய்திருப்பார் என அவர் கூறியிருந்தார்.இது அவருடைய ஒரு அரசியல் போக்காகும். இரண்டரை வருடங்களின் பின்பு மகிந்த ராஜபக்ச அவர்களை அழைத்து பிரதமர் பதவியை கொடுத்திருந்தார்.இது அவருடைய இரண்டாவது அரசியல் போக்காகும்.

அவர் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சண்டையிட்டுக்கொண்டிருந்தால் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவார் என இன்னுமொரு கருத்தைச் சொன்னார்.
பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை நடத்;த வேண்டும்,அதற்குரிய சர்வஜன வாக்குரிமையை நடத்தி மக்களின் சம்மதத்தை பெறப்போகின்றேன் என சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை சொல்லி அடிக்கடி தனது கருத்துகளை மாற்றிக்கொண்டு செல்கின்றார்.

பல்லின மக்களையும் ஆளக்கூடிய ஆளுமை மிக்க ஒரு தலைவராக அவர் இருக்கவேண்டும் என்றுதான் சிறுபான்மை தமிழ்,முஸ்லிம், மலையக மக்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்கு அமோகமான வாக்குகளை அளித்தோம். சிங்கள மக்கள் அவருக்கு வாக்குகள் அளிக்காதுவிட்டாலும் எமது மக்களின் வாக்குகளால் அவர் வெற்றியை பெற்றார். இன்று எம்மையெல்லாம் ஒருபக்கமாக ஒதுக்கிவிட்டு தனக்கெதிராக ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்களை வெவற்றிபெறச் செய்வதற்காக பகிரங்கமாக செயற்பட்ட ஹிஸ்புல்லா அவர்களை தேர்தல் முடிந்தபின்பு அழைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கினார், ராஜாங்க அமைச்சராக்கினார்,ஆளுநராக்கினார்.

அவரை ஏதிர்த்து போட்டியிட்ட அவரை தோல்வியடையச் செய்யவேண்டும் எனச் செயற்பட்ட ஹிஸ்புல்லா அவர்களுக்கு ஏன் இவர் ராஜமரியாதை கொடுத்துக்கொண்டிருக்கின்றார் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.
ஆளுநர் பதவியை இழந்தபின்னர் காத்தான்குடியில் தேர்தல் பிரசாரத்தின்போது தான் மகிந்த சார்பாக செயற்பட்டதாகவும் சஹ்ரான் என்ற பயங்கரவாதிதான் மைத்திரி சார்பாக தேர்தல் பிரசாரம் செய்ததாகவும் ஒரு விநோதமான கருத்தை ஹிஸ்புல்லா அவர்கள் சொல்கின்றார். சஹ்ரான் சார்ந்தவர்கள் மைத்திரியை சார்ந்தவர்கள் என்ற கருத்தை அவர்; சொல்வதன் மூலம் மகிந்த அணியில் தாவுவதற்குரிய படியை அவர் எடுத்திருக்கின்றார்.
ஹிஸ்புல்லா அவர்களை பொறுத்தவரையில் கட்சி மாறுவதில் அவர் வரலாறு படைத்தவர். இவர் ஒரு விநோதமான சந்தர்ப்பவாத அரசியல்வாதியாவார். தனக்கு பதவிகளை கொடுத்து கௌரவம் வழங்கிய ஜனாதிபதி அவர்கள் சஹ்ரான் பக்கம் இருந்தார், சஹ்ரான் அவரைத்தான் ஆதரித்தார் என்ற அடிப்படையில் தான் பயங்கரவாதத்திற்கு எதிரானவர், சஹ்ரான் போன்றவர்கள் தான் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் எனச் சொல்கின்றார் என்றால் இப்போது ஜனாதிபதியின் தேவை அவருக்கு இல்லாதுபோய்விட்டது என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும்.

ஜனாதிபதி அவர்கள் தெரிவுக்குழுவை கலைக்க வேண்டும் என்கின்றார். தெரிவுக்குழுவின் மூலம் பல உண்மைகள் அம்பலத்திற்கு வருகின்றது.பாதுகாப்புச்சபை கூட்டத்திற்கு முக்கியத்துவமிக்க பலரை ஜனாதிபதி புறக்கணித்துள்ளார் என்றால் ஜனாதிபதி நாட்டு பாதுகாப்பு என்பதை விட தனது வீட்டு விடயத்தினைப்போன்றே நாட்டுப்பாதுகாப்பினை நினைத்திருக்கின்றார். ஜனாதிபதி ஆத்திரத்தில் அவசரப்பட்டு உணர்ச்சிபூர்வமாக எடுக்கின்ற முடிவுகள் இந்த நாட்டினை பாதுகாப்பதற்கு எந்தளவிலும் பொருந்தாது.

தற்போது அமைச்சரவையினை கூட்டமாட்டேன் என்று கூறிவருகின்றார். அமைச்சரவை என்பது தனியொரு வீட்டுப்பிரச்சினையல்ல. அது நாட்டுப்பிரச்சினை.பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை கூடவேண்டியது அவசியமாகின்றது.அமைச்சரவையினை கூட்டாமல் இருப்பது என்பது நாட்டின் அபிவிருத்தியை பின்நோக்கி கொண்டுசெல்லும் நிலைக்குவந்துள்ளது.ஜனாதிபதி அவர்கள் அறிவுபூர்வமாக முடிவெடுப்பதைவிட ஆத்திரத்தில் முடிவுகளை எடுப்பது என்பது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.

பாதுகாப்பு சபை விடயத்தில் ஜனாதிபதி அக்கறை காட்டாததன் காரணத்தினால் முன்கூட்டியே அறிந்திருந்த பயங்கரவாத தாக்குதலை தடுக்கமுடியாமல்போய்விட்டது.இந்த பயங்கரவாத தாக்குதல் என்பது அசட்டையினத்தால் ஏற்பட்டதாகியது.

எனவே தெரிவுக்குழு என்பது இருக்கவேண்டும்,விசாரணைகள் செய்யவேண்டும்.சட்டத்தின் முன்பாக யாவரும் சமன் என்பது போன்று யாராக இருந்தாலும் தவறுக்குள்ளானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றோம்.

இவ்வாறு இருக்கும்போது தெரிவுக்குழுவினை கலைக்கவேண்டும்,ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைசெய்தால் போதுமானது என்பது தனக்கு பாதகமான கருத்துகளை தவிர்க்கும் வகையிலேயே ஜனாதிபதி செயற்படுகின்றார்.

இந்த நாட்டின் உச்சதலைவராக கருதப்படுகின்ற ஒருவர் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கும் விடயத்தில் பலவீனமாக இருப்பது என்பது அவருக்கு பாதிப்பு என்பதை விட நாட்டுக்கு பலமான பாதிப்பாக இருக்கும்.

கடந்த காலத்தில் நிலையான அரசியல் தீர்வினை வழங்குவதற்கு தயார் என கூறியிருந்த ஜனாதிபதி,தற்போது 13வது திருத்தமேபோதுமென கூறியிருக்கின்றார்.அவரை ஜனாதிபதியாக கொண்டுவந்த மக்களை தூக்கியெறிந்துவிட்டு அவரை தோற்கடிக்கவேண்டும் என்று செயற்பட்டவர்களின் பக்கமாக சார்ந்துசெயற்படுகின்றார்.

ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகின்றது.அதன் பின்னர் அவர் ஜனாதிபதியாக போட்டியிட்டாலும் சரி எந்த தேர்தலிலும் போட்டியிட்டாலும் அவர் வெல்லமுடியாது என்பதை திட்டவட்டமாக கூறிக்கொள்ளவிரும்புகின்றோம்.