சஹ்ரானால் மட்டக்களப்பில் சுற்றாடலில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலகளாவிய ரீதியில் வளிமாசடைவதன் காரணமாக வருடாந்தம் 70இலட்சம் பேர் உயிரிழப்பதாகவும் அவற்றில் 40இலட்சம் பேர் ஆசிய நாடுகளில் இறப்பதாகவும் மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

சஹ்ரானின் தாக்குதலின் பின்னர் மட்டக்களப்பு நகரில் அதிகளவு வளிமாசடையும் செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

சஹ்ரானின் குண்டுவெடிப்புக்கு பின்னர் பாடசாலைகளுக்கு வாகனங்களில் பிள்ளைகளைக்கொண்டுவருவவோரின் தொகை அதிகரித்துள்ளதன் காரணமாக சுற்றாடலுக்கு அது பாதிப்பினை ஏற்படுத்திவருவதாகவும் இதன்போது தெரிவித்தார்.

உலக சுற்றாடல் தினத்தினையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் உயர் தேசிய பாடசாலையில் இன்று காலை உலக சுற்றாடல் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு சுற்றாடல் அதிகாரசபையும் புனித சிசிலியா பெண்கள் உயர் தேசிய பாடசாலையும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

புனித சிசிலியா பெண்கள் உயர் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரி சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் எஸ்.கோகுலன்,மண்முனை வடக்கு சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர் திருமதி பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சுற்றாடலை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் தற்போது சுற்றாடலின் நிலைமைகள் தொடர்பில் மாணவர்களுக்கு இதன்போது தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் சுற்றாடலை வளப்படுத்துவதில் ஜனாதிபதி விருது பெற்ற மாணவர்கள் இதன்போது விருது வழங்கிகௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலையின் சுற்றாடல்முன்னோடி உறுப்பினர்களுக்கான இலட்சினைகளும் அணிவிக்கப்பட்டன.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கருத்துரைகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.