நான் மக்களுக்குத்தான் பிரதிநிதி மாட்டுக்கு பிரதிநிதியல்ல –வியாழேந்திரன் எம்.பி.சீற்றம்

நான் தமிழ் மக்கள் வாக்களித்துவந்த பிரதிநிதி.நான் மக்களுக்குத்தான் பிரதிநிதி மாட்டுக்கு பிரதிநிதியல்ல என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து கல்வித்திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மண்முனை மேற்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் வள நிலையம் மீளமைக்கப்பட்டு இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

பட்டிப்பளையில் அமைந்துள்ள படுவான்கரை பிரதேசத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நிலையம் இறுதி யுத்ததினை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு தொடக்கம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையமாக செயற்பட்டுவந்தது.

இந்த நிலையில் வடகிழக்கு அபிவிருத்திக்கான செயலணி கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் குறித்த வள நிலையம் விடுவிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது.

மண்முனை மேற்கு கல்வி வலயத்தின் வலய கல்வி பணிப்பாளர் த.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் உட்பட கல்வி திணைக்கள அதிகாரிகள்,பிரதேசசபை உறுப்பினர்கள்,ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வடகிழக்கு செயலணி ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளுக்கு செவிமடுத்து கல்வித்திணைக்களத்திற்குரிய காணியை விடுத்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாக இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

கல்வித்துறைக்குள்ளும் விளையாட்டுத்துறைக்குள்ளும் ஒருபோதும் அரசியல் செல்லக்கூடாது எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் ஆசிரிய பௌதீகள வளப்பற்றாக்குறை கொண்ட வலயங்களாக கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்கள் காணப்படுகின்றன.இதற்கு காரணம் கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சிசெய்தவர்களும் கிழக்கு கல்வி பணிப்பாளர்களும்தான் காரணமாகும்.

மாகாண ரீதியாக ஆட்சிசெய்யும் அரசியல்வாதியாக இருந்தாலும்சரி, மாகாணத்தில் இருந்த கல்வித்துறைக்கு பொறுப்பானவர்களும்சரி இந்த இரண்டு கல்வி வலயங்களிலும் உள்ள ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ஆசிரிய வெற்றிடத்தினைக்காட்டி ஆசிரியர் நியமனம்பெற்றுவந்ததன் பின்னர் அரசியல்வாதிகளை பிடித்துக்கொண்டு தமது இடத்திற்கும் மாவட்டத்திற்கும் சென்ற நிலைமையும் அம்பாறையில் இருந்துகொண்டு இங்கு ஆசிரியர் சம்பளம் எடுத்த நிலமையும் இருக்கின்றது.இதற்கு அரசியலும் மாகாணத்தில் துணைபோனது,மாகாண கல்விபணிப்பாளரும் துணைபோயிருக்கின்றார்.

41வருடமாக வாகரை பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய பகுதியான கட்டுமுறிவு பாடசாலைக்கு ஒரு ஆங்கில ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.கல்வி அமைச்சராக கிழக்கில் ஒரு தமிழர் இருந்துள்ளார்.வெட்ககேடு.தரம் 01 தொடக்கம் 11வரையான பாடசாலையில் ஒரு ஆங்கில ஆசிரியர் இல்லை.
இதேபோன்று வாகரை பிரதேசத்தில் உள்ள மருதங்கேணிகுளம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் 01 தொடக்கம் 03வரையுள்ள வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாத காரணமாக எந்தவித கற்றல்கற்பித்தல் செயற்பாடுகள் இல்லாமல் பாடசாலை வந்துசெல்கின்றனர்.எங்களிடம் செய்யக்கூடிய அதிகாரங்கள் இருந்தும் நாங்கள் அதனைச்செய்யவில்லை.

அண்மையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனரினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களை இரத்துச்செய்யபல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தவேளையில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்போது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வேறு மாவட்டங்களை சேர்ந்த,சகோதர இனத்தினை சேர்ந்த 22 பேர் கல்விசாரா ஊழியர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.கடந்த காலத்தில் இருந்த மாகாண அரசியலே இந்த நியமனத்தினை வழங்கியுள்ளது.

சாதாரண சிற்றூழியர் நியமனத்திற்கு,சாதாரண காவலாளர் நியமனத்திற்கு கூட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் கற்ற பிள்ளைகள் இல்லையா என்ற கேள்வி எங்களுக்குள் எழுகின்றது.

தற்போதுவந்துள்ள ஆளுனர் நீதியாக நியாயமாக செயற்படவேண்டும் என கோரியுள்ளோம்.இந்த மாகாணம் மூவின மக்களும் வாழும் மாகாணம்.இந்த மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கின்றார்கள்.மூன்று இன மக்களுக்கும் சமமான சேவையினை வழங்கவேண்டும் என்று கோரியுள்ளோம்.குரங்கு சேட்டைகளை காட்டினால் நாங்களும் எங்கள் சேட்டைகளை களரீதியாக காட்டவேண்டிவரும்.
இந்த நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதம் ஒரு சமூகத்தினை கருவோடு அழிக்கும் செயற்பாட்டினை செய்துள்ளது.இன்னும் அந்த பயங்கரவாதம் முடிவடையவில்லை.அப்பாவி மக்களை நாங்கள் ஒருபோதும் குற்றம் சொல்வதில்லை.யாராகயிருந்தாலும் நீதியாகவும் நியாயமாகவும் செயற்படவேண்டும்.

நாங்கள் மக்களுக்கு சேவைசெய்யும்போது கட்சிபேதங்கள் காட்டத்தேவையில்லை. அரசியலில்தான் அந்தந்த கட்சிசார்ந்து திறமைகளை காட்டவேண்டும்.

மற்றைய சமூக அரசியல்வாதிகளில் மூன்று பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் 21பேரும் பதவி விலகியுள்ளனர்.தேர்தல் காலங்களில் பல்வேறு நோக்கங்களுடன் செயற்பட்டாலும் தேர்தல் முடிந்ததன் பின்னர் தமது சமூகம் சார்ந்த ஒரு குறிக்கோளுடனேயே அவர்கள் செயற்படுவார்கள்.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது. எனக்கு அழைப்பிருந்தால் பாடசாலை நிகழ்வுகளில் எனது பெயரை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.நான் தமிழ் மக்கள் வாக்களித்துவந்த பிரதிநிதி.நான் மக்களுக்குத்தான் பிரதிநிதி மாட்டுக்கு பிரதிநிதியல்ல.

எமது சமூகத்திற்காக சேவைக்காக வந்துவிட்டால் அனைவரும் ஒன்றித்து பயணிக்கவேண்டும்.எங்களுக்குள் மாறுபட்ட கொள்கைகள்,கருத்துகள் இருக்கலாம்.தேர்தல் காலங்களில் அவற்றினை பார்த்துக்கொள்ளமுடியும்.
கல்விக்குள்ளும் விளையாட்டுக்குள்ளும் அரசியல்வரக்கூடாது என எதிர்பார்ப்பவர்கள் நாங்கள்.20இலட்சம் மக்களைக்கொண்ட ஜமேக்கா ஒலிம்பிக்போட்டிகளில் தங்க பதக்கங்களை அள்ளிக்குவிக்கின்றது.இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் இரண்டு வெள்ளி,ஒரு வெண்கலப்பதக்கமே இதுவரையில் பெறப்பட்டுள்ளது.கல்விக்குள் அரசியல். எல்லாவற்றுக்குள்ளும் அரசியல்.இதன்காரணமாகவே இந்த நிலைமை காணப்படுகின்றது.