தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கும் கலைஞர்களுக்கான அரச விருது

இலங்கையிற் கலையிலக்கியத் துறைகளுக்கு அளப்பரும் பங்காற்றுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லீம் கலைஞர்களை உள்ளடக்கி, அறுபது வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்குக் கலாபூஷண விருது முதலான அரச விருதுகள் வருடந்தோறும் வழங்கப்பட்டும் வருகிறன.
ஆனாலும் இலங்கைத் தீவில், தமிழர்தம் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளைப் பேணிப் பாதுகாத்து, ஊக்குவித்து, அரச கௌரவம் நல்கும் செயற்பாடு முனைப்புடன் இதுவரை இடம்பெறவில்லை என்பது பெருங்குறைபாடும் மறுக்கமுடியாத உண்மையும் ஆகும்.
இந்த நிலையில், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மாண்புமிகு மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலின் கீழ், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், தமிழர்தம் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளைத் தனியே பேணிப் பாதுகாத்து, ஊக்குவித்துத் தம் வாழ்நாளிற் பெரும் பகுதியை இக் கலைகளுக்காகவே அர்ப்பணித்து வாழுகின்ற கலைஞர்களை அங்கீகரித்தும்; வளரும் இளங் கலைஞர்களை ஊக்குவித்தும்; அவர்களுக்கான அரச விருது வழங்கிக் கௌரவம் நல்கும் செயற்பாடு “தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் - கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் விழா – 2019” எனும் பெயரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழர் தம் கலைகள் மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் மரபுவழி மற்றும் நவீன கலை வடிவங்களைப் பேணிக்காக்கவும் எழுத்து, பாடல், வாத்தியம், நாட்டியம், அறிவிப்பு, நெறியாள்கை, சினிமா, கிராமியக்கலைகள், மற்றும் ஏனைய நுண்கலைகள் முதலான பல்துறைக் கலைஞர்கள் இவ் அரச விருது விழாவிற் கௌரவிக்கப்படவுள்ளனர்.
கலைக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணஞ்செய்து, கலையுலகிற்குத் தம் கலைத்திறனால் இருபது வருடங்களுக்குக் குறையாத உன்னத பங்களிப்பை நல்கிய, அறுபது வயதிற்கு மேற்பட்ட மூத்த கலைஞர்கள்; கலையுலகில் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் இன்றும் செயற்படுவதோடு, பதினைந்து வருடங்களுக்குக் குறையாத கலைத்துறைசார் சேவையை ஆற்றிவரும் முப்பது வயதிற்கு மேற்பட்ட, அறுபது வயதிற்கு உட்பட்ட கலைஞர்கள்; தமிழர் தம் கலைகள், மரபுவழி மற்றும் நவீன கலையம்சங்களை அழியாது காப்பாற்றும் மகோன்னத பணியிற் பத்து வருடங்களிற்குக் குறையாத அனுபவமும் அர்ப்பணிப்பான சேவையிற் தம்மை ஈடுபடுத்தி இந்தத் திருநாட்டில், எதிர்காலத்தில் இக் கலைகளை வாழ வைக்கப்போகும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட, முப்பது வயதிற்கு உட்பட்ட இளங் கலைஞர்கள் என்று மூன்று வகுதியினருக்கும் இவ் அரச விருது வழங்கிக் கௌரவிப்பதில் அமைச்சும் திணைக்களமும் பெருமை கொள்வதோடு, கலைஞர்கள் மத்தியிற் புத்துணர்வையும் உத்வேகத்தையும் ஏற்படுத்திக்கொள்ளும் எனவும் நம்புகிறது.
இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பிராந்திய அலுவலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களிற் பெற்றுக்கொள்வதோடு, www.hindudept.gov,lk என்ற திணைக்கள இணையத் தளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்யப்பட்டு, “தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் - கலைஞர்களுக்கான அரச விருது விழா – 2019” எனக் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையிற் குறிப்பிட்டு, 2019.07.20 ஆம் திகதிக்கு முன்னதாகப் “பணிப்பாளர், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248 – 1/1, காலி வீதி, கொழும்பு – 04” எனும் முகவரிக்குப் பதிவுத் தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும்.
அ.உமாமகேஸ்வரன்,
பணிப்பாளர்,
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்
14.06.2019