சமுர்த்தி கொடுப்பனவு நிகழ்வினை புறக்கணித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

மட்டக்களப்பில் நடைபெற்ற சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.


இன்று பிற்பகல் மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அமைச்சர் தயாகமகே தலை மையில் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு ஏறாவூர் நகரில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 74வீதம் தமிழ் மக்கள் உள்ளனர்.24வீதம் முஸ்லிம் மக்கள் உள்ளனர்.சமுர்த்தி என்பது வறிய மக்களுக்கு வழங்கப்படுகின்ற ஒரு கொடுப்பனவு.

மட்டக்களுப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகள் இருக்கின்றது.இவற்றில் 10 பிரதேச செயலாளர் பிரிவுகள் வறுமை கூடிய பிரதேசமாகவுள்ளது.அந்த 10 பிரதேச செயலாளர் பிரிவுகளும் தமிழ் பிரதேச செயலக பிரிவுகளாகவேயுள்ளன.
இந்த சமுர்த்திக்கான கொடுப்பனவு என்பது இந்த 10 பிரதேச செயலக பிரிவினையும் அடைப்படையாகக்கொண்டே மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இங்கு அரசியலை மையப்படுத்தியும் தங்களது இனம்சார்ந்தும் நடவடிக்கையெடுக்கப்படுகின்றது.

தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு இஸ்லாமிய பாடசாலையொன்றில் வைத்து கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது.இந்த நிகழ்வினை பொதுவான இடத்தில் செய்யுங்கள் என சமுர்த்தி அமைச்சர் சொல்லியிருக்கவேண்டும்.
சமுர்த்தி பெறுபவர்களின் பெயர் பட்டியலிலும் சில குளறுபடிகள் இருக்கின்றன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாகிர் மௌலானாவிடம் தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளின் பெயர்பட்டியலை கோரியபோதிலும் அது எங்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் திடீர் என சமுர்த்திக்கான அமைச்சர் தயாகமகேயை அழைத்து இந்த சமுர்த்தி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வினை ஏற்பாடுசெய்துள்ளார்.இந்த நிகழ்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளோம்.
இது தொடர்பில் பிரதமருடனும் பேசவுள்ளோம்.அமைச்சர் தயாகமகேவிடமும் பேசவுள்ளோம்.தமிழ் பகுதிகளில் இவ்வாறான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது எங்கள் ஊடாகவே இவ்வாறான நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
நாங்கள் எமது மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த அரசாங்கத்தின் ஆதரவினை வழங்கியுள்ளோம்.இந்த அமைச்சர்கள் மனித நேயத்துடன் சிந்திக்கவேண்டும்.நாங்கள் அமைச்சு பொறுப்புகளை எடுக்காவிட்டாலும் அவர்களின் வடகிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை அவர்களுடன் இணைந்துசெய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டும்.
அமைச்சர் சஜித் பிரேமதாச வீட்டுத்திட்டங்களை செய்யும்போது எங்களுடன் கலந்துரையாடியே வீட்டுத்திட்டங்களை செய்துவருகின்றார்.ஏன் தயாகமகே அமைச்சரினால் அவ்வாறு செய்யமுடியாது.