மண்முனை தென் மேற்கு பிரதேச மீளாய்வுகூட்டம் - மண்முனை பாலத்தில் காவலரண் அமைக்க கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அபிவிருத்திக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டன.

மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் இன்று முற்பகல் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில்

பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸ் ஏற்பாட்டில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்

எஸ்.வியாழேந்திரன்,ஐக்கிய தேசிய கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி,தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உட்பட மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர்,உறுப்பினர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள்,உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் புதிதான அபிவிருத்திக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டன.
அத்துடன் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலப்பிரிவுகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இங்கு

மேற்கொள்ளப்பட்டன.குறிப்பாக மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுகளில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளின் அனுமதியுடன் சொந்த தேவைக்காக மக்கள் மண் ஏற்றிச்செல்லும்போது அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தும் அதேவேளை இரவு வேளைகளில் சட்ட விரோதமான முறையில் கடத்தப்படும் மண் லொறிகளை தடுக்காமல் அவற்றிற்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலப்பிரிவுகளுக்குள் இருந்து வெளியிடங்களுக்கு மாடுகள் உட்பட சட்ட விரோதமான முறையில்
மண்முனைப்பாலம் ஊடாக கொண்டுசெல்லப்படுவதாகவும் அவை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதுன் அதற்க நிரந்தரத்தீர்வாக மண்முனைப்பாலத்தில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்படுவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

இதேநேரம் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையினால் வேறு இடங்களைச்சேர்ந்தவர்களுக்கு இப்பகுதியில் வியாபாரம் செய்வதற்கு தற்காலிக தடை பிரதேசசபை விதித்தமையானது அவர்களின் பாதுகாப்பு கருதியும் பிரதேசத்தின் பாதுகாப்பு கருதியும் எடுத்ததாகவும் ஆனால் சிலர் அதனை வேறு விதமாக கூறி பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபை தவிசாளர் என்.புஸ்பலிங்கம் சுட்டிக்காட்டினார்.இங்கு வரும் வியாபாரிகளின் பாதுகாப்பினை பொலிஸார் முழுமையாக உத்தரவாதப்படுத்தினால் அதற்கு நாங்கள் அனுமதி வழங்கமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் தமிழ் மக்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் இருந்ததாகவும் அது தொடரவேண்டும் எனவும் இவ்வாறான நிலையில் வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வரும்போது ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அது இந்த மாவட்டத்தில் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் ஏனையவர்களை அழைத்து கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்கமுடியும் என இணைத்தவைவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேபோன்று மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலப்பிரிவுகளில் உள்ள கால்நடைகளை கெவிழியாமடு போன்ற பகுதிகளில் மேய்ச்சலுக்காக கொண்டுசெல்லும்போது வேறு மாவட்டங்களை சேர்ந்த பொலிஸாரினால் மாடுகள் பிடிக்கப்பட்டு அதிகளவான தண்;டப்பணம் அறவிடப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இந்த பிரச்சினையை எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தீர்வுகாணமுடியும் என இணைத்தலைவர்களினால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.