சாகும் வரையிலான உண்ணா விரதத்தில் குதித்த இளைஞன் -இரண்டாவது நாளாகவும் நடக்கும் போராட்டம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்குவதற்கான அழுத்தங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்குவதற்கு நடாத்தப்படும் போராட்டங்களை வலுப்படுத்த கைகோர்க்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான போராட்டத்தில் இளைஞர் ஒருவர் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தினை இன்று மாலை ஆரம்பித்துள்ளார்.

காந்திபூங்கா முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் முன்னெடுத்துவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்  2ஆவது நாளாகவும் தொடந்துவரும் நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத்சாலி ஆகியோரை பதவிநீக்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் நம்பிக்கையில்லா பிரேரணையையும் முன்னைவத்திருந்தார்.அடுத்தக்கட்டமாக நேற்று முன்தினம் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக அதுரலிய தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இதனையடுத்து அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்  நேற்று காலை முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இன்று மாலை தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனின் மகனின்; மகன் டிலக்ஸன் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

சாகும் வரையிலான உண்ணாவிரதமாக இது அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கிவருகின்றனர்.