அக்கரைப்பற்றில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் அவர்களின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அம்பாரை மாவட்ட தமிழத்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

ஆலயத்தின் தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர், கவீந்திரன் கோடீஸ்வரன்  மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.சுரேந்திரன் இணைப்பாளரும் தொழிலதிபருமான ஆர்.ஜெகநாதன்  ஆலயத்தலைவர்கள், பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு ப.கேதீஸ்வரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.

இதன் பின்னர் நினைவுச்சுடர் ஏற்றும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து கொண்டதுடன் கையில் ஏந்திய நினைவுச்சுடர்களை அமரர் நடேசன் அவர்களின் படத்திற்கு முன்னால் வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கடந்த காலங்களிலே ஊடகவியல் சுதந்திரம் மறுக்கப்பட்டு அதன் மூலம் தமிழ் மக்களின்  குரல் நசுக்கப்பட்டது. தேசியத்திலும் சர்வதேசத்திலும் தமிழர்களின் பிரச்சினையை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்த வரிசையிலே நடேசன் ஐயா சிவராம் சுகிர்தராஜன் நிர்மலராஜன் போன்றோரும் சகோதர இனத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டனர். இதன் மூலம் ஊடகத்தை அடக்க முற்பட்டனர். ஆனாலும் இதற்கெல்லாம் சிம்ம சொப்பனமாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் இருந்தனர். ஜநா வரை தமிழ் மக்களின் பிரச்சினையை தைரியமாக கொண்டு சென்றனர். இதனால்; அவர்களது இரத்தத்தையும் சிந்தினர். அவர்கள் அன்று சிந்திய இரத்தத்தின் விளைவே இன்றைய ஊடக சுதந்திரம் என்றார்.

இன்று இந்த நாட்டிலே ஊடக சுதந்திரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. விரும்பிய இடங்களுக்கு சென்று செய்தியை சேகரிக்கும் உரிமையை அரசு ஊடகவியலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. அதனை முறையாக ஊடகவியலாளர்கள் பயன்படுத்த வேண்டும். இதேவேளை ஊடக நிறுவனங்கள் பக்கசார்பின்றி செய்திகளை வெளியிட வேண்டும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தைரியமாக தெரிவிக்க வேண்டும்.

ஆனாலும் சில ஊடகங்கள் சில விடயங்களை இன்று கூட மறைக்கின்றது. சில ஊடகங்கள் சரியான விடயங்களை துல்லியமாக எடுத்துக் கூறுகின்றது. அந்த வகையில்; சிறந்த ஊடகமும் ஊடகவியலாளர்களும் மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருப்பர். அவ்வாறானவர்கள் என்றும் நினைவு கூரப்படவேண்டியவர்கள் என்றார்.

அந்த வகையில் 15 வருடங்கள் கடந்தாலும் நடேசன் ஐயா அவர்களின் பணி மற்றும் அவரது ஊடக தர்மம் போன்றவை மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளது எனவும் கூறினார்.