சிறுவர் நேய நகராக மாறும் மட்டக்களப்பு மாநகரசபை

மட்டக்களப்பு மாநகர சபையினை சிறுவர் நேய மாநகர சபையாக மாற்றுதல் மற்றும் சமூக சேவை செயலணியின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் யுனிசேப் அமைப்பும் இணைந்து சிறுவர் பாதுகாப்பினைக்கொண்ட சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையில் நொச்சிமுனைப்பகுதியில் இந்த சமூக சேவை செயலணி மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் 30 உத்தியோகத்தர்களைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு யுனிசேப்பினால் வழங்கப்பட்ட டப் சாதனமும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.இதன்போது சிறுவர்களின் பாதுகாப்பினையும் அவர்களின் சுதந்திரத்தினையும் அடிப்படையாகக்கொண்டு மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியை சிறுவர் நேய பகுதியாக உருவாக்குவது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

யுனிசேப் நிதியுதவியுடன் சிறுவர் அபிவிருத்தி நிதியம் இதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுத்துவரும் நிலையில் அது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவற்றினால் வழங்கப்படவேண்டிய ஒத்துழைப்பு குறித்து இங்கு கலந்துரையாப்பட்டப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யுனிசேப் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை பொறுப்பாளர் திருமதி ரெபன்ஸியா பற்றசன்,அந்த அமைப்பின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரவீந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் வி.குகதாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறுவர்கள் தொடர்பான விடயங்களில் அரசாங்கம் கூடுதலாக அக்கரையும் நடவடிக்கையும் எடுத்துவருவதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.ஆனால் சிறுவர் தொடர்பாக சமூக ரீதியான செயற்பாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்துவருவதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.