வெல்லாவெளியில் பாலத்திற்குள் ஆணின் சடலம் மீட்பு-மனைவி மீது சந்தேகம் தெரிவிக்கும் உறவுகள்

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாலம் ஒன்றின் கீழிருந்து நேற்று ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

வெல்லாவெளியில் இருந்து காக்காச்சிவட்டைக்கு செல்லும் வீதியில் உள்ள பாலத்திற்கு கீழிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி காக்காச்சிவெட்டை,03வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த 38 வயதையுடைய கே.கரிகரன் என்னும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் இன்று அதிகாலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றிருந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் உறவினர்களினால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சடலத்திற்கு அருகில் நீருக்குள் குறித்த நபர் பயணம் செய்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது..

குறித்த நபரின் தலைகளில் பலத்த காயங்கள் காணப்படுவதனால் இவரை கொலை செய்யப்பட்ட பின்னர்  இங்கு கொணர்ந்து போடப்பட்டிருக்கலாமென உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி மீது சந்தேகம் வெளியிட்டுள்ள உறவினர்கள் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த சடலத்தினை மீட்டுள்ள வெல்லாவெளிப் பொலிசார் இது தொடர்பான விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.