காத்தான்குடி கடற்கரையில் வெடிபொருட்கள் மீட்பு –றில்வானின் சகா காட்டிக்கொடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியின் கடற்கரை பகுதியொன்றில் இருந்து இன்று மாலை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் குண்டு ஒன்று செயலிழக்கச்செய்யப்பட்டது. காத்தான்குடி 06ஆம் வட்டாரத்தில் உள்ள நதியா கடற்கரை பகுதியிலேயே இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று அரச புலனாய்வுத்துறையினரால் சாய்ந்தமருதில் தற்கொலைத்தாக்குதலில் பலியான றில்வானின் சகா ஒருவர் காத்தான்குடியில் கைதுசெய்யபட்டு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது டெட்டனேட்டர் குச்சிகள்,வெடி மருந்துகள்,நேரம் கணிக்கும் குண்டுக்கு பயன்படுத்தப்படும் கடிகாரங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் தயாரிக்கப்பட்ட நிலையில் இருந்த குண்டு ஒன்று விசேட அதிரடிப்படையினர் குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினரால் செயலிழக்கச்செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வெடிபொருட்கள் 2018ஆம் ஆண்டு றில்வானினால் குண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவித்தன.

இதேநேரம் குறித்த கடற்கரை பகுதியில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் தொடர்ந்தும் தேடுதல் பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.