மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம்

இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 31வது நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று காலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு,நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியருகில் இன்று காலை 9.05மணியளவில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

அன்னை பூபதியின் குடும்ப உறுப்பினர்கள்,அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது அன்னை பூபதியின் சமாதியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,இலங்கை தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,இலங்கை தமிழரசுக்கட்சி வாலிப முன்னணி உறுப்பினர்கள்,ஜனநாயக போராளி கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.