நாட்டிற்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடியில் மர நடுகை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் "நாட்டிற்காக ஒன்றினைவோம்" என்ற தேசிய திட்டத்திற்கு  அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இதன் கீழ் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து இன்று காலை பயன்தரு மரங்கள் நடுகை திட்டம் ஒன்றை இன்று காலை ஆரம்பித்துவைத்தனர்.

களுவாஞ்சிகுடியில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இது தொடர்பான நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் சி.பிரகாஸ் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் உட்பட பிரதேசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.இதன்போது 100 தென்னை மரங்கள் நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகம் , மாகாண சபைகள் , அதிகார சபைகள் , வரிசை அமைச்சுக்கள் , திணைக்களங்கள் , ஆகியவற்றின் நிதிக்கொடுப்பனவின் கீழ் இந்த செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் ஒட்டு மொத்தமாக 2015  மில்லியன் செலவில் 1115 வேலைத்திட்டங்கள்  14 பிரதேச பிரிவுகளிலும் 161 கிராம பிரிவுகளிலும் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை  நடைமுறைப்படுத்தப்படவுள்ளன    அதனடிப்படையில் முதல் மூன்று நாட்களுக்கும் செயற்படுத்தப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் 712   மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டு 845 திட்டங்கள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன 20 904  குடும்பங்கள் இதனால் நன்மையடைந்துள்ளன.

அதிகபட்சமாக மண்முனை தெற்கு மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுகளில் 120 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு 415 மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டுள்ளது.