உலகில் மூன்றில் ஒரு பகுதியினர் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர் –மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர்

உலகில் மூன்றில் ஒரு பகுதியினர் குடிநீர் பிரச்சினைகளினால் வருடாந்தம் பாதிக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் சி.பிரகாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையினையடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் நடவடிக்கைகளை பிரதேசசபைகள் முன்னெடுத்துவருகின்றன.

இதன்கீழ் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட சுரவணையடியூற்று பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் குடிநீர் திட்டம் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் சி.பிரகாஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி உட்பட பிரதேசசபை உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோத்தர்கள்,பிரதேசசபை செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நாளாந்தம் 30ஆயிரம் லீற்றர் குடிநீரை வழங்கக்கூடியவாறு இந்த நீர் வழங்கல் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் சுமார் 117 குடும்பங்கள் தினமும் குடிநீரை பெற்றுக்கொள்ளமுடியுமான நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த உதவி உள்ளுராட்சி ஆணையாளர் பிரகாஸ் தெரிவித்தார்.

குடிநீர் என்பது இன்று பாரிய சவாலுக்குரியதாக உலகில் மாற்றம்பெற்றுவரும் நிலையில் அதற்கு ஏற்றாற்போல் நீரை சிக்கனமாக பாவிக்கவேண்டிய தேவையிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இன்று உலகில் 10இலட்சத்திற்கும் அதிகமானோர் குடிநீர் கிடைக்காத நிலையில் உள்ளதாகவும் வறட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாங்கள் குடிநீரை கவனமாக பாவிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.