மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை(20-04) காலை மட்டக்களப்பில் கண்டன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஊறணி சந்தியில் இருந்து இந்த பேரணி மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபம் வரையில் நடைபெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்து,கதிரவெளி இல்மனைட் அகழ்வினை உடன் நிறுத்து,கல்குடா எத்தனோல் தொழிற்சாலையினை மூடு ஆகிய கோரிக்கையினை வலியுறுத்தியே இந்த கண்டன பேரணி நடாத்தப்பட்டது.

இந்த கண்டன பேரணியில் முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் உட்பட மாநகரசபை,பிரதேசசபை உறுப்பினர்கள்,இளைஞர்கள்,பொது அமைப்புகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்.

தேவநாயகம் மண்டபத்தினை பேரணிசென்றடைந்ததும் அங்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்து,கதிரவெளி இல்மனைட் அகழ்வினை உடன் நிறுத்து,கல்குடா எத்தனோல் தொழிற்சாலையினை மூடு ஆகிய கோரிக்கையினை வலியுறுத்தும் வகையிலான கருத்தாடல்கள் நடைபெற்றன.