வேலையற்ற பட்டதாரிகளை அரசுகள் தொடர்ந்து புறக்கணிக்கின்றது –சிவகாந்தன் குற்றச்சாட்டு

வேலையற்ற பட்டதாரிகளை மத்திய,மாகாண அரசுகள் தொடர்ந்து புறக்கணித்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்டத்தில் தமக்கான எந்தவித திட்டங்களும் முன்வைக்கப்படவில்லையெனவும் அதற்கான அழுத்தங்களை தமிழ் பேசும் அரசியல் தலைவர்கள் வழங்கவுமில்லையெனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இன்று காலை மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 2017 தொடக்கம் தமது தொழிலுரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.மத்திய மாகாண அரசுகளிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.ஆனாலும் இரண்டு அரசுகளும் எம்மை புறக்கணித்தேவருகின்றது.
கடந்த வருடம் தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூலம் 20ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.ஆனால் அந்த வாக்குறுதிகள் பொய்யாக்கப்பட்ட நிலையில் பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டனர்.

பட்டதாரிகள் மத்தியில் நரித்தனமான செயற்பாடுகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டது.குறிப்பாக பட்டதாரிகளை பிரித்தாளும் தந்திரம் மூலம் பிரிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளது.பல அரசாங்கங்கள் இருந்துவந்தபோதிலும் எந்த அரசாங்கமும் உள்வாரி வெளிவாரியென்று பிரித்து நியமனங்களை வழங்கவில்லை.

கடந்த ஆட்சிக்காலத்தில் 54ஆயிரம் பட்டதாரிகளுக்கு எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் நியமனங்கள் வழங்கப்பட்டன.ஆனால் இந்த நல்லாட்சி எனப்படும் அரசாங்கத்தில் வழங்கப்பட்ட நியமனங்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத வகையிலேயே வழங்கப்பட்டது.

வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அரசாங்கமோ அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களோ பட்டதாரிகள் விடயத்தில் எந்த கரிசனையையும் காட்டவில்லை.பட்டதாரிகளின் தொழில் விடயம் தொடர்பில் எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை.குறிப்பாக சிறுபான்மை அரசியல் தலைமைகள் கூட எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் கைகளை உயர்த்திவிட்டுவந்துள்ளனர்.பட்டதாரிகள் தொடர்பில் எந்த முன்மொழிவுகளையும் இந்த தமிழ் பேசும் அரசியல்வாதிகள் முன்வைக்காததையிட்டு எமது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கிழக்கு மாகாணசபையில் தற்போது ஆசிரிய பயிலுனர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.2017ஆம் ஆண்டு பயிற்சி அடிப்படையில் இரண்டு வருடங்களுக்கு பட்டதாரிகளை உள்வாங்குமாறு கிழக்கு மாகாணசபையிடம் கோரியிருந்தோம்.ஆனால் அன்றைய முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் அரசாங்கத்தின் சுற்று நிரூபத்திற்கு மாறாக எந்த நியமனங்களும் வழங்கமுடியாது என்று கூறியிருந்தனர்.

ஆனால் அதே மாகாணசபையில் தற்போதுள்ள ஆளுனரினால் அன்று இருந்த சுற்று நிரூபத்தினை உடைத்து பயிற்சி அடிப்படையில் பட்டதாரிகளையும் உயர்தர சித்தியடைந்தவர்களையும் உள்ளீர்க்கும் வகையிலான சுற்றுநிரூபத்தினை வெளியிட்டுள்ளார்.

ஒரு ஆளுனரினால் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கமுடியுமானால் ஏன் அப்போதிருந்த முதலமைச்சரினால் அந்த அமைச்சர்களினால் முன்னெடுக்கமுடியாமல்போனது.இந்த அரசியல்வாதிகள் பட்டதாரிகளை ஒரு கேலிக்கூத்துக்குள்ளாக்கும் செயற்பாடுகளையே செய்துவருகின்றனர்.

ஏனைய மாகாணங்களில் ஆட்சேர்ப்பு செய்யும்போது வயதெல்லையை 45 வயதாக சுற்றுநிரூபம் நிரந்தரமாக வெளியிடப்படுகின்றது.ஆனால் கிழக்கு மாகாணசபையில் அவ்வாறான நிலையில்லை.

விண்ணப்பங்களைகோருகின்றபோது 40வயதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது 45 வயதாக உயர்த்தப்படவேண்டும். வடகிழக்கில் வயதெல்லை அதிகமான பட்டதாரிகள் காணப்படுகின்றனர்.30வருட யுத்தம் காரணமாக பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் பட்டங்களை பூர்த்திசெய்த 40 வயதுக்கு மேற்பட்ட 20க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளனர்.கிழக்கு மாகாண ஆளுனர் தனது அதிகாரத்தினை பயன்படுத்தி வயதெல்லையை 45வயதாக மாற்றவேண்டும் என்றார்.