காத்தான்குடியில் தேசிய தௌஹீத் ஜமாய்தின் தலைவர் உட்பட மூன்று பேர் கைது –வெளிவரும் உண்மைகள்

தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாய்தின் தலைவர் உட்பட மூன்று பேர் காத்தான்குடியில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது தேசிய தௌஹீத் ஜமாய்த் அமைப்பின் ஊடக இணைப்பாளர் அதன் பொருளாளர் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய தௌஹீத் ஜமாய்தின் தலைவராக இருந்து முகமட் சர்ஹான் ஹாசீம் தலைவராக நீக்கப்பட்டதன் பின்னர் தலைவராக செயற்பட்டுவரும் முகமட் தௌவீக், தேசிய தௌஹீத் ஜமாய்த் அமைப்பின் ஊடக இணைப்பாளர் முகமட்லெப்பை முகமட் பைரூஸ், தேசிய தௌஹீத் ஜமாய்தின் பொருளாளர் முகைதீன் பாபா முகமட் பைசர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் தேசிய தௌஹீத் ஜமாய்த் அமைப்பின் ஊடக இணைப்பாளராக செயற்பட்டவரே தேசிய தௌஹீத் ஜமாய்த் அமைப்பின் சமூக வலைத்தளங்களை நடாத்திவருவதாகவும் புலனாய்வுப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக தற்கொலை தாக்குதல்தாரிகள் தோன்றும் வீடியோ இவரால் உருவாக்;ப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்தனர்.

இதேநேரம் இன்று காலை புதியகாத்தான்குடி சபீனா வீதியில் உள்ள வீடு ஒன்று விசேட அதிரடிப்படையினாரால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஐஎஸ்எஸ் பயங்கரவாதியான முகமட் சர்ஹான் ஹாசீமுடன் தொடர்புகளை பேணிவந்ததாக தெரிவிக்கப்படும் அவரின் நண்பர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் சாய்ந்தமருதில் தற்கொலைத்தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரியின் மனைவி உட்பட 15க்கும் மேற்பட்டவர்கள் காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலின் தற்கொலைகுண்டுதாரியான காத்தான்குடியை சேர்ந்த முகமட் ஹசீம் என்பவரின் மனைவியான செய்யது அகமது அஸ்மியா என்னும் பெண்னே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதுவரையில் காத்தான்குடி பகுதியில் 15க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.