போதைப்பொருளுக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் ஒன்றுதிரண்ட பொதுமக்கள்

நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்னும் தொனிப்பொருளிலான நிகழ்வுகளின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம்,களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் ஜனாதிபதி செயலகம் இணைந்து முன்னெடுத்த மாபெரும்போதையொழிப்பு பேரணி இன்று காலை நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி நகரில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஜனாதிபதி செயலகத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கான மேலதிக செயலாளர் கயா அதிகாரி,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் உட்பட முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்,சிவில் பாதுகாப்பு குழுவினர்,இளைஞர்கழக உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

போதைப்பொருளை நாட்டில் இருந்து ஒழிப்பும் போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தினை உருவாக்கும்வோம் என்னும் நடைபெற்ற இந்த பேரணியில் போதைப்பொருள் பாவனையினை தடுக்கும் வகையிலான பதாகைகளை கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம் வரையில் இந்த பேரணி நடைபெற்றதுடன் பேரணியை தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.