முனைக்காட்டில் 152 மாதிரிக்கிராமத்திற்கான அடிக்கல்

தேசிய வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 152வது மாதிரிக்கிராம வீடமைப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் 26 வீடுகளைக்கொண்ட இந்த 152வது மாதிரிக்கிராமம் அமைக்கப்படவுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நட்டுவைத்தார்.

இந்த நிகழ்வில் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி தட்சணகௌரி தினேஸ், மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம்,பிரதேசசபை உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.