நியுசிலாந்து கோரச் சம்பவம் -தீவிரவாதிகள் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்-இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா

நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சேர்ச் எனும் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களிலே இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக குழுமி இருந்த அப்பாவிகள் மீது நடாத்தப்பட்ட கோழைத்தனமான -மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

இறை வணக்கத்திற்காக நிராயுதபாணிகளான நிலையில் பள்ளிவாசல்களிலே குழுமி இருந்த அப்பாவிகள் மீது மிலேச்சத்தனமான முறையில் இயந்திர துப்பாக்கி மூலம் தாக்குதல் நடாத்திய தீவிரவாதிகளது செயலானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுடன், அப்பாவி மக்களை இலக்கு வைக்கின்ற தீவிரவாதம் என்ற பதம் முழு உலகில் இருந்தும் துடைத்தெறியப்பட வேண்டும் என்ற அவசியத்தை குறித்த சம்பவம் உணர்த்தி நிற்கின்றது.

இஸ்லாம் மார்க்கமானது உலகத்திற்கு அமைதியையும் சமாதானத்தையும் போதிக்கின்ற ஒன்றாக இருக்கின்றது, ஒரு போதும் அது தீவிரவாதத்தை ஊக்கப்படுத்தியது கிடையாது, ஒரு மனிதனைக் கொலை செய்தவன் முழு மனித சமூகத்தையும் கொலை செய்தவன் போலாவான் என இஸ்லாம் தெட்டத் தெளிவாக கூறுகிறது,
இவ்வாறான நிலையில் முஸ்லிம்களால் புனிதமாக மதிக்கப்படுகின்ற இறைவனது இல்லமாக கணிக்கப்படுகின்ற பள்ளிவாசலிலே- இறைவனை தொழுது கொண்டிருந்தவர்கள் மீது கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதானது மிக கொடூரமான ஒரு துயர நிகழ்வாகும் என தெரிவித்ததுடன்,

நியூசிலாந்தில் இன்றைய தினம் உயிர்த்தியாகம் செய்த உறவுகளுக்காகவும் அவர்களது ஈடேற்றத்திற்காகவும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் அனைத்து உலகளாவிய முஸ்லிம்களும் பிரார்த்தனை புரிவதுடன், அவர்களுக்காக அனைத்து பிரதேசங்களிலும் விஷேட ஜனாசா தொழுகை மற்றும் பிரார்த்தனைகளை முன்னெடுத்து சமூக ஒற்றுமையை நிலை நிறுத்துமாறும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.