குளம் சேதப்படுத்திய வழக்கு - எட்டு அப்பாவி பொதுமக்கள் விடுதலை – வாலிப முன்னணி நன்றி தெரிவிப்பு.



எட்டு அப்பாவி பொதுமக்களின் விடுதலைக்கு விரைவான நடவடிக்கை எடுத்த சட்டத்தரணியும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட  வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் தெரிவித்தார்.


இது தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாலர்ச்சோலை,  சங்குலை குளத்திற்கு சேதம் ஏற்படுத்தியதாக எட்டு அப்பாவி மக்களுக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கில் பொதுமக்கள் எட்டுப்பேருக்கு எதிராக அரச சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற ரீதியில் பிணையில் விடுவிக்கமுடியாததும், ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடியதுமான குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டை மறுத்து எட்டுப்பேருக்கும் சார்பாக நீதிமன்றில் தோன்றி வழக்காடிய சட்டத்தரணியும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம்  எட்டு பேரையும் விடுதலைசெய்ய உதவினார்.

உண்மையான விடயங்களை நீதிமன்றில் வெளிப்படுத்தி வழக்கு தொடுனர் தரப்பே வழக்கை மீளப்பெற்றுக்கொள்ளும் வகையில் வழக்கை நெறிப்படுத்தி  இரண்டு தவனைகளுடன் வழக்கைத் தள்ளுபடிசெய்து அப்பாவி பொதுமக்களை விடுதலை செய்த முன்னாள் கிழக்கு மாகண சபையின் விவசாய அமைச்சரும்,  இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளருமான, சட்டத்தரணி கி.துரைராசசிங்கம் அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.