வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரும் மத தலைவர்கள்

வடகிழக்கில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி எதிர்வரும் 19ஆம் திகதி வடகிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு மற்றும் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் சர்வமதங்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வினைப்பெற்றுக்கொடுக்கமுன்வரவேண்டும் எனவும் இங்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

காணாமல்போனோர் சங்கம் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு எதிர்வரும் 19ஆம் திகதி அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அன்றைய தினம் வர்த்தக நிலையங்களை பூட்டியும் போக்குவரத்துகளை இடை நிறுத்தியும் பொதுமக்கள் தமது பயணங்களை நிறுத்தியும் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பேரணிக்கு ஒத்துழைக்குமாறும் மதத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்பு இன்றுஇது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தியது.

மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் அடிகளார்,ஏ.ஜே.எம்.மௌலவி இலியாஸ் முகமட்,சிவஸ்ரீ எஸ்.சிவபாலன் குருக்கள்,தென்னிந்திய திருச்சபையினை சேர்ந்த அருட்பணி ஜே.எஸ்.ரூபன்,சிவஸ்ரீ ஜெகதீஸ்வர சர்மா ஆகியோர் இதன்போது கருத்து தெரிவித்தனர்.

காணாமல்போனவர்களின் உறவினர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுவருவதன் காரணமாக இன்று அந்த மக்கள் சர்வதேசத்திடம் நீதிகேட்டு நிற்கும் நிலையுருவாகியுள்ளதாக ஏ.ஜே.எம்.மௌலவி இலியாஸ் முகமட் இங்கு கருத்து தெரிவித்தார்.

சர்வதேசம் இது தொடர்பில் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்கவேண்டும் என்ற நோக்கில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு அனைத்து இன,மத மக்களும் தங்களது ஆதரவினை வழங்கவேண்டும்.

அன்றைய தினம் தங்களது வர்த்தக நிலையங்களை மூடியும் போக்குவரத்தில் ஈடுபடுவோரும் ஏனைய தொழில் செய்வோரும் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரச்சினை தங்களது பிரச்சினையாக கொண்டு ஒரு நாள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்பதுடன் அன்றைய தினம் நடைபெறும் பேரணியிலும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.