மட்டக்களப்பில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை ஆசிரியர்கள் அரை மணி நேரம் பணி பகிஸ்கரிப்பு மற்றும் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடாத்தினர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அழைப்பினையேற்று இன்று காலை 8.00மணி தொடக்கம் 8.30மணி வரையில் இந்த போராட்டங்களை நடாத்தினர்.

கைகளில் கறுப்பு பட்டியணிந்து  ஆசிரியர்கள் வீதிகளில் தமது கோரிக்கையினை வலியுறுத்தி போராட்டம் நடாத்தினர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் உ.உதயரூபன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கவன ஈர்ப்பு போராட்டம் சிவானந்தா தேசிய பாடசாலை முன்பாக நடைபெற்றது.

ஆசிரியர்களின் அதிபர்களின் சம்பள அதிகரிப்பு,வாகன தீர்வை மற்றும் இடமாற்றங்களில் தலையீடுகள் உட்பட பல்வேறு கோசங்களை வலிறுத்தி இந்த போராட்டம் நடாத்தப்பட்டது.

இதேபோன்று ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கறுப்பு துணிகளை கைகளில் ஏந்தி ஆசிரியர்கள்,அதிபர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கபடாத வகையில் அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.