19 ஆம் திகதிய ஹர்த்தால்,பேரணிக்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் ஆதரவு -வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பு

வடகிழக்கில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் மற்றும் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள பேரணிக்கு தமிழ் -முஸ்லிம் மக்கள்,அமைப்புகள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளதாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.

மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள அரசசார்பற்ற ஒன்றியங்களின் அமையமாக இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்கள்,பள்ளிவாயல்களின் ஒன்றியங்கள் என்பனவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ள நிலையில் அவர்கள் தமது போராட்டத்திற்கான முழுமையான ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் இதன்போது அமலநாயகி தெரிவித்தார்.

தமிழ் -முஸ்லிம் வர்த்தக சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருவதாகவும் அவர்கள் எதிர்வரும் 19ஆம் திகதிய கடையடைப்புக்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் வடக்கு மாகாண வர்த்தக சங்கங்களும் இந்தபோராட்டத்திற்கு ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 19ஆம் திகதி காலை கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பேரணி ஆரம்பமாகி புகையிரத வீதியூடாக வந்து திருமலை வீதியூடாக மட்டக்களப்பு காந்திபூங்காவினையடைந்து அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாகவும் மாவட்ட இணைப்பாளர் அமலநாயகி தெரிவித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எமது பிரச்சினைகள் கொண்டுசெல்லப்படவேண்டும்,இலங்கை அரசாங்கதிற்கு ஐ.நா.மனித உரிமை பேரவையில் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி எமது கருத்தினை அன்றைய தினம் முன்வைக்கவுள்ளோம்.அதற்கு அனைத்து தரப்பினரும்ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

காணாமல்போன உறவுகள் மீட்கப்படவேண்டும்,அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வதற்கு சர்வதேச நீதிபொறிமுறைஊடாக அதனை தெரியப்படுத்தி எங்களுக்கு நடந்த அநீதிக்கு பொறுப்புக்கூறவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது.அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்கவேண்டும்.அரசாங்கத்தில் நம்பிக்கையிழந்த நிலையிலேயே நாங்கள் சர்வதேசத்திடம் கோரிநிற்கின்றோம்.

எனவே நடைபெறவுள்ள இந்தபோராட்டத்திற்கு வடகிழக்கில் உள்ள அனைத்து தரப்பினரும் தங்களது ஆதரவினை வழங்கமுன்வரவேண்டும் என்றார்.

இதேவேளை வடகிழக்கில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் விடுக்கப்பட்ட ஹர்த்தால் மற்றும் பேரணி போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.

வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைக்கு சர்வதேசம் கவனம் செலுத்தும் வகையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் போராட்டத்திற்கு அனைவரையும்ஆதரவளிக்குமாறு இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள அரசசார்பற்ற ஒன்றியங்களின் அமையமாக இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.