ரி.என்.ஏ. ஊடாக தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கு டீ.என்.ஏ.பரிசோதi தேவை –சிறிநேசன் எம்.பி.

ரி.என்.ஏ. ஊடாக தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கு டி.என்.ஏ.பரிசோதனைகள் செய்யவேண்டிய தேவையிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பினை குழப்பும் வகையில் செயற்படும் மகிந்தராஜபக்ஸவுடன் எந்த வகையிலும் கைகோர்த்து செயற்படமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கோத்தபாய நாடங்களை நடாத்திவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியதுடன் அந்த நாடகத்தினை தமிழ் மக்கள் நம்பமாட்டர்கள் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழூர்முனையில் பொங்கல் விழா இன்று காலை நடைபெற்றது.

மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.கிராமிய சூழலில் தமிழர்களின் பாரம்பரிய கலாசாரம் தாங்கியதாக இந்த பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் தலைவர் ச.விதுர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம்,பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திருமதி கி.சதீஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கிராமிய கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கிராமிய நிகழ்வுகள் மற்றும் அதிதிகள் கௌரவிப்புகளும் நடைபெற்றன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஒக்டோபர் 26ஆம் திகதி அரசியல் சதியொன்று செய்யப்பட்டது. ஜனநாயகத்திற்கு மாறாகவும் யாப்பு விதிகளுக்கு மாறாகவும் அரசியல் சட்ட ஆட்சிக்;கு மாறாகவும் திடீரென புதிய பிரதமர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த வேளையில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஜனநாயகத்திற்கு மாறாக எந்த சலுகைகளையோ பதவிகளையோ பெற்றுக்கொள்வதில்லை, பணத்திற்கு விலைபோவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தது.

எமது கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் உறுதியான நிலைப்பாட்டிலிருந்தன. இந்த இரு கட்சிகளினதும் உறுதிப்பாட்டின் காரணமாக மனோகணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு முன்னணியும் உறுதியான நிலையிலிருந்தது. ஒருசிலர் தளம்பியிருந்தனர். முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் என்பன இவ்விடயத்தில் ஒன்றாக இருந்தன. இருந்தபோதும் எமது கட்சியிலிருந்த ஒருவர் பதவிக்காக சென்று தன்னுடைய மரியாதையை இழந்துவிட்டார்.

இவர் கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ச அவர்களின் காட்டாட்சியைப்பற்றி மிகவும் ஆக்ரோசமாகவும் கடுமையாகவும் விமர்சித்து வாக்குகளை பெற்றுக்கொண்டவராவார். ஆனால் இதையெல்லாம் மறந்து அவர் பதவிக்காக சென்றதால் நூறுவீதம் கட்டுக்கோப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சற்று சிதைந்துவிட்டது. எங்களைப் பொறுத்தவரை ஐந்து ஆண்டுகள் மக்கள் ஆணையை பெற்ற கட்சியிலிருந்து எதுவந்தாலும் அதனை அனுபவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதைவிடுத்து பதவிக்கோ பணத்திற்கோ நாங்கள் சோரம் போனால் எங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுகின்றவர்களாகவே இருக்க முடியும். அரசியலில் நேற்று ஒரு கொள்கை, இன்றொரு கொள்கை, நாளையொரு கொள்கை என்று எங்களுடைய சுயஇலாபத்திற்காக எதையும் மாற்றிக்கொள்ள முடியாது. அவ்வாறு மாற்றுகின்றவர்களுக்கு மக்கள் சரியான பாடங்களை புகட்ட வேண்டும். நாங்கள் உறுதியான தலைமைத்துவத்தின் கீழ் செல்லவேண்டியவர்களாக இருக்க வேண்டும்.

அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான தேதி நிர்ணயிக்கப்படவிருந்தது. இதனை தடுக்கும் நோக்கில்தான் பாராளுமன்றத்தை குழப்பியடித்து சின்னாபின்னப்படுத்துகின்ற செயற்பாட்டினை முன்னாள் ஜனாதிபதி அவர்களும் அவருடைய சகாக்களும் செய்திருந்தார்கள். எங்களுடைய அரசியல் யாப்பை குழப்ப வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயற்படுகின்றபோது அவர்களோடு எந்த வகையில் நாங்கள் இணைந்து செயற்பட முடியும்?பதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்?

எங்களுடைய மக்கள் அரசியல் உரிமையை கேட்;கின்றார்கள். புதிய அரசியல் யாப்பொன்றை எதிர்பார்த்திருக்கின்றார்கள். அதேபோல் அபிவிருத்தி என்கின்ற பொருளாதார உரிமையையும் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அரசியல் உரிமையும் பொருளாதார உரிமையும் சமகாலத்தில் சமாந்தரமாக கிடைக்க வேண்டுமென்பது எங்களுடைய எதிர்பார்ப்பாகும். அரியல் உரிமை இழுபட்டுச்செல்கின்றது என்பதற்காக எமது பொருளாதார உரிமையை மறந்துவிடக்கூடாது.

நாங்கள் பிரதமரோடும் சிரேஷ்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களாக இருந்தவர்களோடும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேறாக நாங்கள் அமைச்சர்களாக இல்லாது விட்டாலும் எமது மக்களின் தேவைகளுக்கான அபிவிருத்திகளை செய்ய வேண்டும், தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டுவருகின்றோம்.

கடந்தமுறை பத்துக்கோடியாக இருந்த ஊரக எழுச்சித்திட்டத்திற்கான நிதி இம்முறை முப்பது கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் விஷேட அபிவிருத்திகளுக்கான முன்மொழிவுகளையும் தரும்படி எங்களிடம் கேட்டிருக்கின்றனர். நாங்கள் ஏமாளிகளல்லர்.

புதிய அரசியல் யாப்பிற்கு பெயர் வைப்பதில்தான் சிலர் முனைப்புடன் செயற்படுகின்றனர். அரசியல் யாப்பு சமஷ்டியா ஒற்றையாட்சியா என்பதில்தான் வாதப்பிரதிவாதங்கள் நடக்கின்றன. ஒரு சமஷ்டி யாப்பிற்குரிய பண்புகள் எவையென்பதை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அதுது வரையப்பட்ட நெகிழ்ச்சியற்ற யாப்பாக இருக்க வேண்டும். மத்திய அரசும் மாகாண அரசுகளும் இணைந்துதான் அந்த அரசியலமைப்பை திருத்தக்கூடியதாக இருக்க வேண்டுமே தவிர மத்திய அரசு மட்டும் திருத்தக்கூடியதான நிலைமை இருக்கக்கூடாது. முறையான அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும். மத்திய அரசினால் மாகாண அரசிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்தியஅரசு நினைத்தவுடன் பறிக்கக்பட முடியாத விதத்தில் அதிகாரப் பகிர்வுகள் இடம்பெறக்கூடியதே சமஷ்டிப்பண்புடைய அரசியல் யாப்பு என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்றமானது மேல்சபை, கீழ்சபையென இரண்டு சபைகளை கொண்டிருக்க வேண்டும். மத்திய அரசிற்கும் மாகாண அரசிற்குமிடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது அதனை நடுநிலையாக நின்று தீர்க்கக்கூடிய சமஷ்டி நீதிமன்றம் ஒன்று இருக்க வேண்டும். இப்படியான தன்மைகளை கொண்டிருந்தால் அதனை சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பாக சொல்ல முடியும். மத்தியஅரசு நினைத்தவுடன் பறிக்கப்பட முடியாத விதத்தில் அதிகாரப் பகிர்வுகள் இடம்பெற வேண்டுமென்பதே எங்களுடைய நிலைப்பாடாகும்.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆட்சியமைத்தபோது யாரெல்லாம் அவருக்கு துதி பாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த சக்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து சின்னாபின்னமாக்கி பலவீனப்படுத்தி தமிழர்கள் உரிமைகளை பெறக்கூடாது என்ற அடிப்படையில்செயற்படடுக்கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்காக தன்னுடைய இரட்டைக் குடியுரிமைகளில் ஒன்றினை துறப்பதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்கள் செயற்படுகின்றார். தமிழ் மக்களின் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக புதிய வேடமொன்று தரித்திருப்பதாக அவர் முகநூலில் பதிவிட்டிருக்கின்றார். எனது தங்கை நிருபமா ராஜபக்சவின் கணவன் திருநடேசன், அவருடைய உறவினர் பிரபாகரன்,ஆகவே பிரபாகரன் எனக்கும் உறவினர் என்ற ஒரு புதிய ஏமாற்று நாடகத்தை அவர் செய்திருக்கன்றார்.

தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக எந்த நாடகத்தை நடத்தினாலும் அதனை விளங்கிக்கொள்ளக்கூடிய அனுபவம் எங்களிடம் இருக்கின்றது. எங்களுடைய போராட்டத்தை சிதைத்து இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்தவர்களுக்கு பக்கபலமாக நின்று பதவிகளையும் சலுகைகளையும் பெறுகின்ற செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற சூடு சொரணையுள்ள எவரும் ஈடுபடமாட்டார்கள். அப்படி யெற்படுபவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் சென்று வாக்குகளை கோருவதற்கு அருகதையற்றவர்களாவர்.

இனிவரும் காலங்களில் நினைத்தவாறு கட்சிவிட்டு கட்சி தாவுகின்ற எந்தவொரு வேட்பாளர்களையும் நாங்கள் பட்டியலில் நியமிக்காது இருப்பதற்கு ஏற்றவகையில் ரீ.என்.ஏ.யில் வேட்பாளராக நிறுத்துவதாக இருந்தால் அவர்களுக்கு டீ.என்.ஏ.பரிசோதானை செய்யவேண்டிய நிலமையிருக்கின்றது.

அந்த டீ.என்.ஏ.பரிசோதனையில் பாயிகின்ற குணங்கள்,பறக்கின்ற குணங்கள்,சலுகைகளுக்கு இரையாகின்ற குணங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து கட்சியில் இணைத்துக்கொண்டுசெல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.