மட்டக்களப்பில் அறநெறிப்பாடசாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுஜீத் பிரேமதாசவின் வழிகாட்டலின் கீழ் நாடெங்கிலும் 50 அறநெறிப்பாடசாலைகளை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு இன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நடைபெற்றது.

ஆன்மீகத்தோடு இணைந்த அபிவிருத்தி,மாணவர்களுக்கு நிழல்கொடுக்கும் அறநெறிப்பாடசாலை என்னும் திட்டம் தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.

இதன்கீழ் தாழங்குடா ஸ்ரீவிநாயகர் அறநெறிப்பாடசாலைக்கான கட்டிடத்திற்கான அடிக்கல் நடம் நிகழ்வு இன்று நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன்,மண்முனைப்பற்று பிரதேசசபை தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம்,மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

40இலட்சம் ரூபா செலவில் இந்த அறநெறிப்பாடசாலை அமைக்கப்படவுள்ளது.வசதிகள் அற்ற அறநெறிப்பாடசாலைகளினை வசதிகளை மேம்படுத்த வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுஜீத் பிரேமதாச நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.