மனித உரிமைகள் முதலுதவி நிலையத்தின் செயற்பாடுகள் -பயன்பெறுமாறு அழைப்பு

மட்டக்களப்பு ஹரித்தாஸ் எகட் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் முதலுதவி நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள ஹரித்தாஸ் எகட் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு ஹரித்தாஸ் எகட் அமைப்பினால் மனித உரிமைகள் முதலுதவி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்பவர்களுக்கு உரிய வழிப்படுத்தலை மேற்கொண்டு அவர்களுக்கான உதவிகளை வழங்கும் வகையில் இந்த நிலையம் செயற்படுகின்றது.

இதற்காக பல தொண்டர் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு கிராமிய ரீதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு கலந்துரையாடல் மட்டக்களப்பு ஹரித்தாஸ் எகட் அமைப்பின் நிர்வாக உத்தியோகத்தர் மைக்கல் அலோசியஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி பிரதிநிதிகள், தேசிய சமாதான பேரவை பிரதிநிதிகள், மனித உரிமைகள் முதலுதவி நிலைய தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.