தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் போராட்டம்

மலைய தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தினை 1000ரூபாவாக அதிகரிக்க கோரியும் அவர்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு வழங்க கோரியும் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்து போராட்டமும் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்றிலில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் மாநகரசபை,பிரதேச சபை உறுப்பினர்கள், முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவான வகையில் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கையெழுத்துப்பெறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கவுள்ளதாக முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் மலையக மக்களை தொடர்ந்து ஏமாற்றிவருவதாகவும் இங்கு அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதில் தோட்டத்தொழிலாளர்களுக்கான தீர்வும் முன்வைக்கப்படவேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.