போதைப்பொருளுக்கு எதிராக வீதியில் இறங்கிய ஆனைப்பந்தி மாணவர்கள்

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போதையற்ற நாட்டினை உருவாக்கும் என்னும் தொனிப்பொருளிலான பாடசாலை வார நிகழ்வுகள் நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளில் நடைபெற்றுவருகின்றன.

இலங்கையில் அதிகூடிய மதுபாவனையாளர்கள் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக இனங்காணப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்திலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகினறன.

“போதைப்பொருளில் இருந்து பாதுகாப்பாய் இருப்பதற்கு மாணவர்களாகிய நாம் கற்றுக்கொள்வோம்”என்னும் தலைப்பிலான மாபெரும் விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள்,பெற்றோர்,ஆசிரியர்கள்,பொலிஸார் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

பிடிக்காதே,பிடிக்காதே புகையினை பிடிக்காதே,ஒழிப்போம் ஒழிப்போம் போதையினை ஒழிப்போம் என்னும் கோசங்களை எழுப்பியவாறு மட்டக்களப்பு நகர் ஊடாக இந்த பேரணி நடைபெற்றது.

இதன்போது போதைப்பாவனைக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.