வாழைச்சேனையில் மதுபான விற்பனை நிலையம் முற்றுகை –பெருமளவு மதுபான போத்தல்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியில் வீடு ஒன்றில் நடாத்தப்பட்டுவந்த மதுபான விற்பனை நிலையம் நேற்று இரவு மதுவரிதிணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து பெருமளவான மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று மாலை மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை கட்டியெழுப்பும் செயற்றிட்டத்தின் கீழ் சட்ட விரோத போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் மதுவரித்திணைக்களம் தொடர்ச்சியான நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ரி.தயாளேஸ்வரகுமாரின் வழிகாட்டலின் கீழ் மதுவரித்திணைக்களத்தினை சேர்ந்த வி.காண்டீபன் தலைமையிலான குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.

இதன்போது பியர் ரின்கள் 60000 மில்லி லீற்றர்களைக்கொண்ட 136 ரின்களும் 17460 மில்லி லீற்றர்களைக்கொண்ட 97 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு இன்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கினை விசாரணைசெய்த வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி பஷீர் குறித்த நபருக்கு 50ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தார்.