மட்டக்களப்பு மாநகரசபையின் முதல் வரவு-செலவுத்திட்டம் வெற்றி – ரி.எம்.வி.பி.எதிர்ப்பு

மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது வரவு-செலவுத்திட்டம் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு-செலவு திட்டத்தினை சமர்ப்பிபதற்கான விசேட அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது மாநகரசபையின் முதல்வரினால் வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான விசேட உரை நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து உறுப்பினர்களின் விவாததத்துக்கு விடப்பட்டது.

வரவு –செலவுத்திட்டம் தொடர்பிலும் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

வரவு-செலவுத்திட்ட தயாரிப்புகளில் உறுப்பினர்கள் சிலர் புறக்கணிக்கப்பட்டதாகவும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
எனினும் அனைவரினதும் கருத்துகளும் மாநகர மக்களின் எதிர்பார்ப்புகள் உள்ளடக்கப்பட்டே வரவு-செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டதாக மாநகர முதல்வரினால் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் வரவு-செலவுத்திட்டத்தினை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்;டபோது வரவு –செலவுத்திட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் ஐந்து பேரும் ஈ.பி.டி.பி.உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி,தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் வரவு-செலவுத்திட்டத்திற்கு ஆதவு வழங்கினர்.

இதனடிப்படையில் 29 உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாகவும் 06 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துடன் 03 உறுப்பினர்கள் சபைக்கு இன்று சமூகமளிக்கவில்லை.இதன்கீழ் 23மேலதிக வாக்குகளினால் வரவுசெலவுத்திட்;டம் நிறைவேற்றப்படுவதாக மாநகர முதல்வர் அறிவித்தார்.