மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ந்து வறுமையான மாவட்டமாகவுள்ளது –கவலைப்படும் அரச அதிபர்

வறுமையினால் பாதிக்கப்பட்ட பகுதியாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுவதாக என என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பின் வரலாற்றுசிறப்புமிக்க கல்லடி பாலத்தில் சமுர்த்தி பயனாளின் உற்பத்திகளினை உள்ளடக்கிய சௌபாக்கியா விற்பனை கண்காட்சி இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கல்லடி பாலத்தின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையிலும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டில் பொதுமக்கள் சுத்தமான,விலை குறைவில் பொருட்களை கொள்வனவுசெய்யவேண்டும் என்பதற்காகவும் இந்த சந்தை திறக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14பிரதேச செயலாளர் பிரிவினையும் உள்ளடக்கியதாக இந்த சௌபாக்கியா விற்பனையும் கண்காட்சியும் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் திருமதி ஏ.பாக்கியராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி புண்ணியமூர்த்தி,மாவட்ட கணக்காளர் ஜெகதீஸ்வரன்,பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சமுர்த்தி இக்கண்காட்சியில் சமுர்த்தி வங்கியூடாக சுயதொழில் மற்றும் வாழ்வாதார கடன்களை பெற்ற சமுர்த்தி பயனுகரிகளின் நூற்றுக்கு மேற்பட்ட விற்பனை காட்சி கூடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வறுமை நிலையில் உள்ள மக்களை அதில் இருந்து மீட்டு வாழ்வாதார மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் செயற்றிட்டங்கள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் வறுமையொழிப்புக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவருகின்றபோதிலும் அந்த வறுமைஅதிகரித்துச்செல்வதையோ காண்கின்றோம். அந்தவறுமை குறைப்புக்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியாக போய்ச்சேருகின்றதா என்பதை நாங்கள் மதிப்பீடுசெய்துபார்க்கவேண்டும் என இங்கு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உரையாற்றும்போது தெரிவித்தார்.

இலங்கையில் 4.1வீதமான வறுமை நிலையுள்ளபோதிலும் மட்டக்களப்பு மாவட்டம் 11.3வீதமாக வறுமைநிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.வறுமையினால் பாதிக்கப்பட்ட பகுதியாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

சமுர்த்தி திட்டம் சரியாக செயற்படுத்தப்படுவதன் ஊடாக வறுமை நிலையினை குறைக்க முயற்சிக்க சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது செயற்பாடுகளை காத்திரமான முறையில் முன்னெடுக்கவேண்டும் எனவும் அரசாங்க அதிபர் வேண்டுகோள்விடுத்தார்.