வவுணதீவில் பொலிஸார் படுகொலைக்கு எதிராக மட்டக்களப்பில் நடந்த ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

டொலர்களுக்கு சமாதானத்தினை அழிக்காதே,வடகிழக்கின் அமைதியில் கைவைக்காதே,சமாதானத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டத்தினை நடைமுறைப்படுத்து,சமாதானத்தினை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றுகூடுங்கள் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதன்போது பொலிஸாரின் படுகொலைக்கு எதிராக பல்வேறு கோசங்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களினால் எழுப்பப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாவண்ணம் உரிய தரப்பினர் செயற்படவேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.

கொலையாளிகள் தங்களது தவறை உணர்ந்து சரணடைந்து இயல்புநிலையினை ஏற்படுத்தமுன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.