மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சுமார்ட் சமூக வட்டத்தின் முகநூல் ஆரையம்பதியில் அங்குரார்ப்பணம்

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை அபிவிருத்தி செய்வதற்காகவும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேற்பார்வையில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் சுமார்ட்  சமுக வட்டங்களுக்கான முகநூல் அங்குரார்ப்பண வைபவம் (14) வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. 
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. சத்தியானந்தி நமசிவாயம் அவர்களது தலைமையில் மட்/ஆரையம்பதி இராமகிருஸ்ண மிஷன் மகா வித்தியாலத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய மாணிக்கம் உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம், புதுக்குடியிருப்பு ஆயுள்வேத தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி.ஜெ.பாஸ்கரன், ஆரையம்பதி தபாலகத்தின் தபாலதிபர் திருமதி.வை.லோகேஸ்வரராஜா, ஓறியன்ற் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுமார்ட்   சமூக வட்ட குழுத்தலைவர் எஸ்.பாஸ்கரன, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுமார்ட் சமூக வட்ட பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் இராஜதுரை இராஜசுரேஸ் உட்பட பிரதேச செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களென பெருந்திரலானோர் கலந்து கொண்டிருந்தனர். 

அதிதிகள்    மலர்மாலை அணிவிக்கப்பட்டு மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன், பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சுமார்ட் சமூக வட்டம் தொடர்பான அறிமுக உரையினை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுமார்ட் சமூக வட்ட பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் இராஜதுரை இராஜசுரேஸ் ஆற்றியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து  மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 5 கிராம உத்தியோகத்தர்கள்; பிரிவுகளுக்கான சுமார்ட் சமூக வட்டத்தின் முகநூல் பிரதம அதிதி மற்றும் சிறப்பு அதிதிளினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. தொடர்ந்துமாக சுமார்ட் சமூக வட்டம் தொடர்பான விரிவான விளக்கவுரையினை சுமார்ட் சமூக வட்டக் குழுத்தலைவர்  எஸ்.பாஸ்கரன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஜீ.அருணன் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வானது இனிதே நிறைவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.