கடல் கொந்தளிப்பால் நடந்த விபரீதம் - மக்கள் விடுக்கும் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக சில பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நாவலடி பகுதியில் கடல்கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் உட்புகுந்ததனால் வீதிகள் நீரினால் மூழ்கிய நிலையிலுள்ளதை காணமுடிகின்றது.

நாவலடி-கல்லடி பிரதான வீதி கடல்நீர் உட்புகுந்த காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் நீர் உட்புகுந்துள்ளதையும் காணமுடிகின்றது.

இதன்காரணமாக குறித்த பகுதி ஊடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நாவலடி கடல்hநச்சியம்மன் ஆலயத்தினுள்ளும் கடல் நீர் புகுந்துள்ளதை காணமுடிகின்றது.

குறித்த பிரதான வீதியூடான பகுதி கடும் தாழ்வான பகுதியாக உள்ளதனால் கடல்கொந்தளிப்பு காலங்களில் இலகுவில் கடல்நீர் உட்புகும் நிலையுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியை புனரமைக்க நடவடிக்கையெடுக்குமாறு கடந்த காலங்களில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் யாரும் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியை உயரமாக்கி செப்பனிடுவதன் ஊடாக குறித்த வீதி கடல்நீரினால் பாதிக்கப்படுவதை குறைக்குமுடியும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியூடாக செல்லும் நீர் கிராமத்திற்குள்ளும் புகும் நிலையேற்படுவதாகவும் இதன்காரணமாக கிணறுகளில் உள்ள நீர் உவர்நீராக மாறும் நிலையேற்படுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட சுனாமியினால் பாரிய அழிவினை சந்தித்த இப்பகுதி மக்கள் மீண்டும் ஒரு அழிவினை சந்திக்கும் நிலைக்கு செல்ல அனுமதிக்கவேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே குறித்த வீதி தொடர்பில் உரிய அரசியல்வாதிகள்,அதிகாரிகள் கவனத்தில்கொண்டு எதிர்காலத்தில் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.