விடுதலைக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்க நடவடிக்கை –சிறிநேசன் எம்.பி.

சுமுகமான சூழலில் பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்,உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்படவேண்டும்,தண்டனை வழங்கப்படவேண்டும்.அதில் மாற்று கருத்து இல்லை,ஆனால் அதனுடன் தொடர்புபடாதவர்கள் iதுசெய்யப்படுவதும் நீண்டநாட்கள் தடுத்துவைக்கப்படுவதும் தவிர்க்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தனது கணவனை விடுதலைசெய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அஜந்தன் எனப்படும் சி.இராஜகுமாரனின் மனைவியினை இன்று (17-12)பிற்பகல் சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர் து.மதரன்,இராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் தொடர்புகொண்டு குறித்த கைதுதொடர்பில் விபரங்களை தெரிவித்தார்.

குறித்த கைதுசெய்யப்பட்ட நபர் தொடர்பான தகவல்களைப்பெற்று சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகளை இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மேற்கொண்டார்.

அத்துடன் இது தொடர்பில் இன்று நடைபெறும் ஜனாதிபதியுடனான வடகிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கிருந்த சிறுவர்களுக்கு உதவிகள் வழங்கிவருவது அங்கிருந்தவர்களை நெகழச்செய்ததுடன் பாராளுமன்ற உறுப்பினரையும் கவர்ந்தது.