மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ன செய்கின்றது –மாநகர முதல்வர் கேள்வி

அரசார்பற்ற நிறுவனங்கள் இன்று மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு எந்தளவுக்கு துணைநின்றது என்பது கேள்விக்குறியாகவுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் அளப்பெரிய பணிகளை அரசார்பற்ற நிறுவனங்கள் ஆற்றியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

லெடர் ஓப் கோப் அமைப்பின் ஒளிவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று காலை மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.

லெடர் ஓப் கோப் அமைப்பின் பொதுமுகாமையாளர் திருமதி ரஞ்சினி மதிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம்,லேடி லயன்ஸ் கழக பொருளாளர் திருமதி விஜிதா நோபட் மற்றும் மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளை வழங்குதில் கடந்த நான்கு வருடமாக லெடர் ஓப் கோப் அமைப்பு சேவையாற்றிவருவதுடன் வறிய நிலையில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்திற்கான உதவிகளையும் வழங்கிவருகின்றது.

கடந்த நான்கு வருடத்தில் 250க்கும் மேற்பட்ட வறிய மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளை வழங்கியுள்ளது.

இதன்போது லெடர் ஓப் கோப் அமைப்பினூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் வாழ்வாதார உதவிகள் பெற்று வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

யுத்த காலத்தில் அரசார்பற்ற நிறுவனங்கள் இல்லாவிட்டால் மக்கள் உணவின்றி இறந்திருக்கும் நிலையேற்பட்டிருக்கும்.அக்காலத்தில் அரசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாகவும் தேவை கருத்தியதாக இருந்ததாகவும் இங்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.

ஆனால் இன்று சில வாழ்வாதார செயற்பாடுகளை அரசார்பற்ற நிறுவனங்கள் மேற்கொள்கின்றபோதிலும் அதன் மூலம் மக்கள் எவ்வளவு பயனடைந்தார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசார்பற்ற நிறுவனங்களினால் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட ஆடுகள்,மாடுகள்,கோழிகளை கூட்டினால் மாவட்டத்தில் உள்ள மக்களை விட அதிகமாக இருக்கவேண்டும்.ஆனால் அவற்றில் பெரும்பாலானவை வீரயமாக்கப்பட்டுள்ளது.பொருளாதாரத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பாவனை எங்களுக்குள் திட்டமிட்ட வகையில் உட்புகுத்தப்படுகின்றது.பல வடிவங்களில் தமிழ் மக்களுக்குள் புகுத்தப்பட்டு சமூகத்தினை அழிவுப்பாதைக்குள்சென்ற சமூகமாக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.திட்டமிடப்பட்டுள்ள வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு நாங்கள் பலியாகிவிடக்கூடாது.