இராணுவ முகாமுக்குள் புகுந்த கொள்ளையன் - கைதுசெய்யுமாறு கோரும் குருக்கள்மடம் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இடம்பெற்றுவரும் கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று இரவு கொள்ளைகளில் ஈடுபடவந்த ஒருவரை அப்பகுதி இளைஞர்கள் மடக்கி பிடிக்க முற்பட்டபோதே அவர் தப்பிச்சென்று அப்பகுதியில் உள்ள இராணுவ முகாமில் புகுந்ததாகவும் அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்று குருக்கள்மடம் செல்லக்கதிர்காமம் ஆலய முன்றிலில் களுவாஞ்சிகுடி பொலிஸார்,அப்பகுதி இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் கிராம முக்கிஸ்தர்கள்,இளைஞர்கள் இதன்போது கலந்துகொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர்.

கடந்த 14ஆம் திகதி இரண்டு வீடுகளுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்களின் கழுத்தில் இருந்த மாலைகளை பறித்துச்சென்றதையடுத்து இரவு வேளைகளில் குருக்கள்மடம் இளைஞர்கள் கண்காணிப்பு கடமைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வீடொன்றினுல் புகுந்து பெண்னொருவரின் மாலையை அபகரிக்க ஒருவர் முயன்றபோது அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் குறித்த நபரை பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பியோடியுள்ளார்.அவரை இளைஞர்கள் துரத்திச்சென்றபோது குருக்கள்மடத்தில் உள்ள இராணுவ முகாமுக்குள் குறித்த நபர் சென்றதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்த இளைஞர்கள் குறித்த நபரை கைதுசெய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததுடன் அது தொடர்பான காணொளியையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேநேரம் தமது முகாமுக்குள் அவ்வாறான நபர்கள் யாரும் வரவில்லையென தெரிவித்த அப்பகுதி இராணுவத்தினர் இது தொடர்பான முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான நபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.