மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கேதார கௌரி விரதம்

இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரதத்தின் இறுதிநாளான இன்று வியாழக்கிழமை அதிகாலை கும்பம் கரைக்கும் நிகழ்வுகள் ஆலயங்களில் நடைபெற்றன.

கடந்த 21 தினங்களாக அனுஸ்;டிக்கப்பட்டுவந்த கேதார கௌரி விரதத்தின் மிகமுக்கிய நிகழ்வான காப்பு கட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கேதார கௌரிவிரதத்ததின் காப்புக்கட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த கேதார கௌரிவிரத வழிபாட்டு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது விசேட யாகபூஜை மற்றும் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கேதாரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து அடியார்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது.