வாழைச்சேனை கடதாசி ஆலையை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை



மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை உடனடியாக ஆரம்பித்து தொழில் வாய்ப்பிளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலணியில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் -

இக்கூட்டம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவு அறிக்கையினை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தேன்.

எனது முன்மொழிவில் வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை உள்ளடக்கியுள்ளதை ஜனாதிபதி சபையில் சுட்டிக்காட்டி. அதனை தமது நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளமையையும் தெரிவித்தார் மேலும் இதுசார்பான கிழக்கு மாகாண ஆளுனர் கடதாசி கம்பனி காணியில் சில திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டி கோரிக்கையை அப்போது முன்வைத்தார்.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுவதுடன் இதன் அவசிய தன்மை தொடர்பாகவும தெளிவாக ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டினேன். இங்கு ஆயுட்கால உத்தரவாதத்துடன் இரு வொயிலர் இயந்திரங்கள் உள்ளன. அவை திருத்தப்பட்டு கோவை மட்டை உற்பத்தி செய்யக் கூடிய நிலை உள்ளன.

முதலீட்டார்கள் இதற்கு முதலீடு செய்வதற்கு தயாராக உள்ளார்களம் என்னால் இதற்கான முதலீட்டார்களை பெற்றுத் தரமுடியும், கடதாசி ஆலையை ஆரம்பிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் என்றும் தெளிவாக எடுத்துக் கூறினேன்.

ஜனாதிபதி செயலணி குழு செயலாளர், கைத்தொழில் அமைச்சின் செயலாளர், முதலீட்டு சபையின் பணிப்பாளர் போன்றோருடன் நேரடியாக இவ்விடயமாக கலந்துரையாடி கடந்த வருடத்தில் சீனா, கொரியா, இந்தியா நாட்டின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை இயங்கி நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசங்க அனுமதி வழங்காமையால் இந்நடவடிக்கை தடைப்பட்டுள்ளது தொழிவுபடுத்தினேன்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவலுள்ள தோணிதாட்டமடு பகுதியில் மக்கள் வாழ்ந்த 14 வீடுகளை இராணுவம் ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்துள்ளது. எனவே இராணுவத்தை அகற்றி வீடுகளை மக்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பாவனைக்காக ஒரு மாதத்திற்கு
400 மில்லியனுக்குமேல் நிதி  செலவிடப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 20 மதுபானசாலைகள் இருக்க வேண்டிய நிலையில் இங்கு 67 மதுபானசாலைகள் மற்றும் உல்லாச விடுதிகளில் மேலும் மதுபானசாலைகள் இருப்பதாகவும், மட்டக்களப்பு மாவட்டம் வறுமையிலும், போதையிலும் முன்னிலையில் இருப்பதையும் கூறியதுடன், மதுபானசாலை பெருக்கத்தை குறைக்குமாறு வேண்டிக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி  தனது ஆட்சிக் காலத்தில் மதுபானசாலைகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அவ்வாறு இருந்தால் உடனடியாக தான் தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

நீண்டகாலமாக பொதுமக்களுக்கு பிரச்சனையாக உள்ள கிரான் பாலம் அமைப்பது தொடர்பில் இத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் கிரான் குடும்பிமலை வடமுனை வீதி 20 கிலோ மீற்றார் புனரமைப்பு செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூடம் 5000, மானிய அடிப்படையில் வீடுகள், 40000, கிணறு 2000, விவசாய கிணறுகள் 1000, யுத்த வலய வீடுகள் புனரமைப்பு 1500, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழில் வாய்ப்பு என்பவற்றை ஏற்படுத்தல் போன்ற திட்டங்கள்; ஜனாதிபதியிடம் சமர்பித்துள்ளேன்.

வாழைச்சேனை கும்புறுமூலையில் அச்சு கூட்டுத்தாபனம், முறக்கொட்டாஞ்சேனை தேவாபுரத்தில் அரிசி ஆலை, சித்தாண்டியில் பால் பண்ணை உற்பத்தி நிலையம் அமைத்தல். மண்டூர், கதிரவெளியில் ஓட்டுத் தொழிற்சாலை, வாகரை, களுவன்கேணி, வவுணதீவு, வெல்லாவெளியில் ஆடைத் தொழிற்சாலை என்பவற்றை அமைத்து வறிய மக்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதியிடம் பாராளுமன்ற உறுப்பினர் எழுத்து மூலம் வேண்டுகோள் முன்வைத்துள்ளேன் என்றார்.