கிரான்புல்சேனையைக் கட்ட முடியாது என்றால் அது நீர்ப்பாசன இலாகாவுக்கு வெட்கக்கேடு…


கிரான்புல்சேனையைக் கட்ட முடியாது என்றால் அது நீர்ப்பாசன இலாகாவுக்கு வெட்கக்கேடு…

(முன்னாள் கிழக்கு விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம்)

கிரான்புல்சேனை அணைக்கட்டினைக் கட்ட முடியாது என்றால் அது நீர்ப்பாசன இலாகாவுக்கு வெட்கக்கேடான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன். ஒரு சிறய ஆற்றைக் கடக்கும் அணையொன்றை அமைக்க முடியாது என்பது பெருமைப்படக் கூடிய விடயம் அல்ல என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இன்று ஈரளக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிரண்புல் அணைக்கட்டு ஒவ்வொரு வருடமும் சுமார் 25 லெட்சம் ரூபாய் செலவழித்து மண்அணை அமைக்கப்படுவதும், பின்னர் அது பெருவெள்ளங்களில் சேதமுறுவதுமாகவே இருந்தது. அதனை அப்படியே தொடர்ந்து தற்காலிகமாக அமைப்பதில் தான் நிரந்தர அணையை எதிர்ப்பவர்கள் விரும்பம் காட்டுகின்றார்கள்.

இதற்காக நாங்கள் பல தடவைகள் பல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் நாட்டின் அசாதாரண நிலை காரணமாக முடியவில்லை. தற்போது மீண்டும் அந்த அணைக்கட்டினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு கடந்த வருடம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கற்பாறைகள் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால் இதனைத் தடுப்பதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நீர்ப்பாசனத் திணைக்கத்திற்குள்ளேயே இந்த கிரான்புல் அணைக்கட்டு தொடர்பில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றது. ஒரே ஒருவரைத் தவிர அனைத்து பொறியியலாளர்களும் இந்த அணையை அமைப்பதற்கு முடியும் என்று தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தை உரிய அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு மேலும் கொண்டு வந்துள்ளோம்.

இந்த அணைக்கட்டு தொடர்பில் தற்போது எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலணியிலும் சமர்ப்பித்துள்ளார்கள். இந்தக் கிரான்புல்சேனை அணைக்கட்டினைக் கட்ட முடியாது என்றால் அது நீர்ப்பாசன இலாகாவுக்கு வெட்கக்கேடான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன். ஒரு சிறய ஆற்றைக் கடக்கும் அணையொன்றை அமைக்க முடியாது என்பது பெருமைப்படக் கூடிய விடயம் அல்ல என்று தெரிவித்தார்.