இந்தியா வேலைத்திட்டங்களை செய்தால் சீனா வரவேண்டிய அவசியம் இருக்காது –வியாழேந்திரன் எம்.பி.


இந்தியா முன்வந்து வடகிழக்கில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது இங்கு சீனா வரவேண்டிய அவசியம் இருக்காது என்பதை இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள இரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளை இலங்கைக்கு அழைத்துவந்து அவர்களுக்கான தேவைகளையும் நிறைவேற்றிக்கொடுக்க இந்தியா முன்வரவேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடியை மேம்படுத்தும் வகையில் மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த வலைகள் வழங்கிவைக்கப்பட்டன.
முதல்கட்டமாக பன்குடாவெளி,புலையவெளி ஆகிய பகுதிகளை சேர்ந்த 46மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு பன்குடாவெளி கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வலைகளை வழங்கிவைத்தார்.

இதன்போது குறித்த பகுதிகளில் உள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்களின் பிரச்சினை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.மேய்ச்சல் தரை பிரச்சினை காரணமாக பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் காணப்படுகின்றன.அந்த கால்நடைக்குரிய மேய்ச்சல் தரையினை உறுதிப்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது.அதுமட்டுமன்றி வாகரை,கிரான்,வவுணதீவு,வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அதிகளவான கால்நடைகௌ; காணப்படுகின்றன.அவர்களின் கால்நடை வளர்ப்பிற்கான மேய்ச்சல் தரை வர்த்தமானியில் அறிவிக்கப்படவேண்டும்.

இன்று மேய்ச்சல் தரைக்குள் வன இலகாவும் வனஜீவராசிகள் திணைக்களமும் பொலிஸாரின் உதவியுடன் கால்நடை வளர்ப்போரை கைதுசெய்யும் நிலையிருந்துவருகின்றது.சில இடங்களில் மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள் செய்யப்பட்டு மேய்ச்சல் தரையில் உள்ள கால்நடைகள் சுடப்படுகின்றன.வெல்லாவெளி பகுதியில் அண்மையில் 30க்கும் மேற்பட்ட மாடுகள் சுடப்பட்டுள்ளன.மாதவனை ,மயிலந்தனை பகுதியில் கடந்த காலத்தில் 40க்கும் மேற்பட்ட மாடுகள் சுடப்பட்டுள்ளன.

கால்நடைகள் தொடர்பான அளவீடுகளை செய்து அதற்கு ஏற்றாற்போல் மேய்ச்சல் தரைகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கால்நடை வளர்ப்போரின் ஒத்துழைப்பு என்பது மிகவும் குறைவானதாக காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் நிலமீட்பு போராட்டத்தினை தற்போது முன்னெடுத்துவருகின்றோம்.அவ்வாறு முன்னெடுத்துவரும்போது அந்தபோராட்டத்தில் முன்னிற்பவர்களை அதில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக மாற்று சமூகத்தினை சேர்ந்த அரசியல்வாதிகளும் அவர்களின் முகவர்களும் எங்களது சமூகத்தில் உள்ளவர்களையே எங்களுக்கு எதிராகபேசவைக்கின்றனர்.

இன்று சிலர் அபிவிருத்தி மட்டுமே தமக்கு தேவையென்னும் வகையில் செயற்படுகின்றனர்.இதற்காக இந்த நாட்டில் தமிழ் மக்கள் போராடவில்லை.இதற்காக இழப்புகளை சந்திக்கவில்லை.ஒரு கிறிவல் வீதிக்கும் கொங்கிறீட் வீதிக்கும் தமிழ் மக்கள் ஆயுதம் தூக்கி போராடவில்லை.இந்த மண்ணுக்காகவே இவ்வளவு போராட்டங்களையும் நடாத்தினோம்.இந்த மண்ணுக்காகவே இவ்வளவு இழப்புக்களையும் சந்தித்தோம்.

போராட்ட காலங்களில் பாதுகாக்கப்பட்ட எமது நிலபுலங்கள் இன்று ஆயிரக்கணக்கில் அபகரிப்பு செய்யப்படுகின்றன.ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் பறிபோகும் நிலையேற்பட்டுள்ளது.பல விதங்களிலும் எமது காணிகளை பாதுகாக்கவேண்டி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அபிவிருத்தி என்ற போர்வையில் ஆயிரக்கக்கணக்கான ஏக்கர் காணிகள் வேறு இடங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன.வாகரை பிரதேசத்தில் தனி நபர்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

2009இல் இருந்து 2018வரையில் இந்த மாவட்டத்தில் பறிபோயியுள்ள காணிகள் தொடர்பில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றேன்.தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அது தொடர்பான விபரங்கள் பெறப்பட்டு ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் சென்று ஒரு பத்து பேர்ச் காணிகளை கோரும்போது பல்வேறு சட்டரீதியான விடயங்கள் பேசப்படுகின்றன.இந்த நிலையில் எமது நிலத்தினையும் வளத்தினையும் பாதுகாப்பதில் மிகவும் கவனமாக செயற்படுகின்றோம்.

வாகரை பகுதியில் அபிவிருத்திக்கு என வேறு இடங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த காணிகளில் அபிவிருததிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இன்று வாகரை பகுதி சிங்கப்பூராக மாற்றம்பெற்றிருக்கும்.ஆனால் அங்கு அபிவிருத்தி என்பதை காரணம் காட்டி மாற்று இனத்தவர்களினால் காணி அபகரிப்புக்காக குடியேற்றங்களை செய்வதற்காக இவ்வாறு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பெற்றுவைத்துள்ளனர்.

இந்திய அரசாங்கத்தினால் பல்வேறு செயற்றிட்டங்கள் வடக்கிலும் மலையகத்திலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படுகின்றபோதிலும் கிழக்கில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் போதுமானதாக இருக்கவில்லை.இது தொடர்பில் அண்மையில் இந்திய தூதுவரை மட்டக்களப்பில் சந்தித்தபோது எடுத்துக்கூறியிருக்கின்றோம்.

ஏன் இங்கு சீனா வருகின்றது,சீனாவின் ஆதிக்கம் ஏன் அதிகரிக்கின்றது.இன்று பொலநறுவையில் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார்கள்,கொழும்பில் பல வேலைத்திட்டங்களை சீனா செய்துகொடுத்துள்ளது.அங்கு அதனை செய்துகொடுத்துவிட்டு அதற்கு பரிகாரமாக மட்டக்களப்பில் 6500 ஏக்கர் காணியை சீனாவுக்கு கரும்பு செய்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.எமது நேசநாடான இந்தியா இங்கு வந்து வேலைத்திட்டங்களை செய்யும்போது சீனா ஏன் இங்குவரவேண்டும்.இது தொடர்பில் நாங்கள் இந்திய தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளோம்.தமிழ் மக்களுக்கு வடகிழக்கில் வீடுகளை கட்டிக்கொடுங்கள் என்று கூறியுள்ளோம்.
வடக்குடன் ஒப்பிடும்போது கிழக்கின் தேவை அதிகளவாக காணப்படுகின்றன.முடிந்தளவு இங்குள்ள பிரச்சினைக்கு உதவிசெய்யுங்கள் கேட்டிருக்கின்றோம்.