மிக விரைவில் மாகாணசபை தேர்தலை நடாத்துமாறு கோரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி

மக்கள் ஆட்சிமூலம் ஜனநாயகத்தினை நிலைநாட்டும் வகையில் மிக விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடாத்த நல்லாட்சி அரசாங்கம் ஏற்பாடுகளை செய்யவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

30வருடமாக ஆயுதம் ஏந்திபோராடி,எதுவும் கிடைக்காத சூழலில் குறைந்தஅதிகாரத்துடன் கிடைத்த மாகாணசபையாவது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்களாட்சி நடைபெறவேண்டும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

நேற்று மாலை அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு ஒரு வருடங்களை கடந்துள்ள நிலையில் மாகாணசபை தேர்தல் தொடர்பில் எந்தவிதமான திட்டவட்டமான அறிவிப்பு இல்லாமல் மாகாணத்தில் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிசெய்யமுடியாத சூழல் தொடர்ந்துஇருந்துவருகின்றது.

நாடாளுமன்றத்திலும் அரசியல்மேடைகளிலும் ஒரு பேசுபொருளாக மட்டுமே மாகாணசபை தேர்தல் பேசப்படுகின்றதே தவிர இன்றுவரையில் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

தமிழ் மக்கள் கடந்த 30வருடமாக ஆயுதம் ஏந்திபோராடி,எதுவும் கிடைக்காத சூழலில் குறைந்தஅதிகாரத்துடன் கிடைத்த மாகாணசபையாவது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்களாட்சி நடைபெறவேண்டும்.
மாகாணசபை தேர்தல் தொடர்ந்து இழுபறியில் இருப்பதானது ஜனநாயகத்திற்கு முரண்பாடான கருத்துகளுக்கு எதிர்கால சமூகத்தினை வழிநடாத்தும் செயற்பாடாக இருக்கின்றது.

ஜனநாயக ரீதியாக மிக விரைவில் மாகாணசபை தேர்தல் நடாத்தப்படவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் தற்போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நில நிர்வாக பிரச்சினைகளுக்கு முடிவுகட்டவேண்டுமாகவிருந்தால் மாகாணசபை தேர்தல் மிக விரைவாக நடாத்தப்படவேண்டும்.

இன்று பழைய முறையில் தேர்தல் நடாத்துவதா,புதிய முறையில்தேர்தல் நடாத்துவதா என்றவகையில் கால இழுத்தடிப்புகள் செய்யப்படுகின்றன.கடந்த காலத்தில் புதிய முறையில் தேர்தல் நடாத்தப்படவேண்டும் என மாகாணசபையிலும் பாராளுமன்றத்திலும் கையை உயர்த்தியவர்கள் அந்த முறைமை வேண்டாம் எனவும் அதனை மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் கையை உயர்த்தியுள்ளனர்.

இவ்வாறான இரட்டை வேடத்தினைப்போடாமல் மக்களின் பணத்தினைக்கொண்டு பல குழுக்கள் அமைக்கப்பட்டு பல ஆய்வுகளை செய்து பணத்தினை வீண்விரயம் செய்துவிட்டு மீண்டும் பழைய முறைக்கு செல்வோம் என்று ஒரு சாரார் குறிப்பிடுவது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது.

எது எப்படி என்றாலும் பழைய முறையிலாவது புதிய முறையிலாவது மாகாணசபை தேர்தல் நடாத்தப்படவேண்டும்.அப்போதுதான் அங்கு மக்களாட்சி நிலைநிறுத்தப்படும்.அரச இயந்திரத்தினை சூழற்றும் சக்தியாக மக்கள் சக்தி இருக்கும்.மிக விரைவில் மாகாணசபை தேர்தல் நடாத்தும் ஏற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் செய்யவேண்டும் என்பது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கோரிக்கையாகவுள்ளது.