பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பலிக்கும் பிள்ளையானின் கனவு

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டு இடைநடுவில் இடை நிறுத்தப்பட்டிருந்த இலங்கையில் மிகப்பெரும் பொது நூலகத்தின் நிர்மாணப்பணியை மீள ஆரம்பிக்கும் வகையில் நிதியை வழங்குவதற்கு அமைச்சரவை நிதியொதுக்கீடுசெய்துள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முயற்சியினால் அவரின் முதலமைச்சர் காலப்பகுதியில் இதற்கான முதல்கட்ட நிதியொதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு முதலமைச்சர் நிலையில் இருந்து சந்திரகாந்தன் மாற்றப்பட்டதன் பின்னர் பொதுநூலகத்தின் கட்டுமானப்பணிப்பு நிதிகள் ஒதுக்கப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
குறித்த நூலகத்தினை மீளகட்டியெழுப்பும் வகையில் நிதிகளை வழங்குமாறு கடந்த காலத்தில் பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பான கடிதங்களும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன் ஆகியோரினால் இது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்தன்.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது மட்டக்களப்பு பொதுநூலகத்தினை மீள கட்டியெழுப்புவதற்கு 169.97மில்லியன் ரூபா நிதியொதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.