உணர்வுபூர்வமாக நடைபெற்ற சவுக்கடி நினைவேந்தல் நிகழ்வு

மட்;டக்களப்பு சவுக்கடி பகுதியில் 1990-09-20 அன்று படையினரின் உதவியுடன் ஊர்காவல் படையினரால் படுகொலைசெய்யப்பட்ட 33பேரின் நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் குழந்தைகள்,சிறுவர்கள்,பெண்கள்,முதியவர்கள் என 33பேர் வெட்டியும் சுட்டும் படுகொலைசெய்யப்பட்டனர்.

இந்த படுகொலையினை நினைவுகூரும் வகையில சவுக்கடியில் உள்ள உயிர்நீர்த்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்ற.

முன்னதாக படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நீதிவழங்கப்படாததை வெளிப்படுத்தும் வகையிலும் உயிரிழந்தவர்களின் ஆன்ம ஈடெற்றத்திற்காகவும் அமைதியான முறையிலான ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.

குறித்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்  உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,மததலைவர்கள்,உயிர்நீத்த உறவுகளின் உறவினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது விசேட திருப்பலி பூஜை ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள நினைவுத்தூபிக்கான அடிக்கல்லும் நடப்பட்டது.