விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலய பாற்குட பவனி

கிழக்கிலங்கையின் மிகவும் பழமையானதும் பிரசித்திபெற்றதும் இலங்கையில் முதன்முறையாக ஆறு அடி உயரமான கருங்கல் திருவாசியுடன் மூல விக்கிரகம் அமையப்பெற்ற மட்டக்களப்பு,விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு இன்று காலை ஆரம்பமானது.

வருடாந்த திருச்சடங்கினை முன்னிட்டு இன்று காலை நாவற்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான அடியார்கள் பாற்குடம் ஏந்தியவண்ணம் பாற்குட பவனி நடைபெற்றது.

ஒரு கிலோமீற்றர் தூரம் இந்த பாற்குட பவனி சிறப்பான முறையில் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

சிறுவர்கள் பெரியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த பால்குட பவனியில் பங்குகொண்டமை சிறப்பம்சமாகும்.

ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயத்தினை பாற்குட பவனியானது வந்தடைந்ததும் பவனியாக கொண்டுவரப்பட்ட பாற்குடங்கள் அம்பாளுக்கு அபிசேகம் செய்யப்பட்டன.

அதனைத்தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.இன்று இரவு அம்பாளின் திருக்கதவு திறத்தலுடன் உற்சவம் ஆரம்பமாகின்றது.

ஐந்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்களில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு கும்பச்சடங்கும்,திங்கட்கிழமை இரவு பள்ளயச்சடங்கும்,செவ்வாய்க்கிழமை அதிகாலை தீமிதிப்பு சடங்கும் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் தனித்துவ வழிபாட்டு முறைகளையும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் கொண்டதாக ஆலயத்தின் திருச்சடங்கு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.