ஆரையம்பதியில் எல்லைக்காவலன் நரசிங்க ஆலயம் உடைப்பு – நாசகார செயல் என சந்தேகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நரசிங்கர் ஆலயத்தில் உள்ள விக்கிரகங்களே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு இந்த விக்கரகங்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் இன்று அதிகாலை ஆலயத்திற்கு வழிபாடுகளுக்கு சென்றவர்களே இதனைக்கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதன்போது ஆலயத்திற்கு முன்பாகவிருந்த விக்கரகங்கள், திரௌபதையம்மன்,ஆஞ்சநேயர் ஆலய விக்கிரகங்களும் பரிபாலன தெய்வ சூழங்களும் உடைக்கப்பட்;டுள்ளதுடன் மட அறையும் உடைக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஆலய மூலஸ்தான கதவுகளும் உடைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஷ்தூரிஆராய்ச்சி தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நாசகார எண்ணத்தின் அடைப்படையில் மேற்கொள்ளப்பட்டதா அல்லது கொள்ளையிடும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதா என பல்வேறு கோணத்திலும் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பொலிஸாருடன் கலந்துரையாடியதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,மண்முனைப்பற்று பிரதேசசபை தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம்,மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

குறித்த ஆலயம் மீது கடந்த காலங்களில் பல்வேறு தடவைகள் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆலயத்தினை அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்கு ஒரு தரப்பினர் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டுவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாகவே குறித்த ஆலயத்தின் விக்கிரகங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் பிரதேசமாக காணப்படும் அப்பகுதியை சூழ மாற்று இனத்தவர்கள் காணிகளை பிடித்துக்கொண்டு இப்போது இந்த ஆலயத்தினையும் அபகரிக்க முனைவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னர் ஆலய வளாகத்திற்குள் பல தடவைகள் மாடு அறுத்த கழிவுகள் வீசப்பட்டிருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்படவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.