முடங்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை – ஓய்வுபெற்றவர் மீண்டும் பணிப்பாளராக வந்த அதிசயம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தற்காலிக பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வில்சென்ற பணிப்பாளர் ஒருவருக்கு மீண்டும் ஆறு மாதகால நியமனம் வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முறையற்ற வகையில் குறித்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த நியமனம் நிறுத்தப்பட்டு புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் தனது கடமையினை மேற்கொள்ள வழியேற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அரச வைத்தியர்கள் சங்கம்,தாதியர்கள் சங்கம்,சிற்றூழிர்கள் சங்கம் என்பன இணைந்து இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று பிற்பகல் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள்,தாதியர் சங்க பிரதிநிதிகள்,முதன்மை தாதிய சங்க பிரதிநிதிகள்,வைத்தியசாலையின் சிற்றூழியர் சங்கள பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர்.

நாளை வெள்ளிக்கிழமை காலை 8.00மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன் அன்று காலை 10.00மணி தொடக்கம் 12.00மணி வரையில் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தின்போது விடுதிகளின் நடவடிக்கைகளுக்கோ,அவசர சிகிச்சை பிரிவுகளின் நடவடிக்கைகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் வைத்தியசாலையின் இயல்புநிலைக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையிலேயே போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் 12.00மணிக்கு பின்னர் வைத்தியசாலையின் சகல நடவடிக்கைகளும் வழமைபோன்று செயற்படும் எனவும் நோயாளர்கள் வருகைதந்து சேவைகளை பெறமுடியும் எனவும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்த சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கிளையின் செயலாளர் டாக்டர் கே.மரியான்ரூபராஜன்,மட்டக்களப்பு மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் டாக்டர் கௌரிசங்கர்,பொது ஐக்கிய தாதியர் சங்க கிழக்கு மாகாண இணைப்பாளர் நா.சசிகரன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அரசதாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதி கு.ஜெகநீதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதிதாக சகல தகமையும் கொண்ட ஒருவர் தற்காலிகமாக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வுபெற்றுச்செல்லும் ஒருவரை சேவை நீடிப்பு வழங்க மீண்டும் பணிப்பாளராக கொண்டுவரவேண்டும் என்ற தேவைப்பாடு வைத்தியசாலையில் இல்லையெனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

முறையற்ற வகையிலேயே குறித்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தமது தாய்சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.