கிழக்கு முதலமைச்சராக தமிழரே வரவேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதி

அரசியல் தீர்வினைவென்றெடுப்பதினை தடுப்பில் சிங்கள தரப்பில் இருந்து மட்டுமல்லாமல் தமிழர் தரப்பில் இருந்தும் திரைமறைவில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின்(டெலோ) பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சிறிக்காந்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆனைப்பந்தியில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையகத்தில் நேற்று மாலை கட்சியின் தலைவரும் குழுக்களின் பிரதிதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றினையும் நடாத்தினர்.இதில் செல்வம் அடைக்கலநாதன், சிறிக்காந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சனம் செய்தவதில் முனைப்புக்காட்டும் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கான எந்த தீர்வினையும் முன்வைப்பதும் இல்லை வெளிப்படுத்துவதும் இல்லையெனவும் சிறிக்காந்தா தெரிவித்தார்.

தமிழர்கள் ஒன்றுபட்டே பயணிக்கவேண்டும்.தமிழர்களின் ஒற்றுமையினை காட்டிக்கொடுப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள், மண்ணையும் எமது இருப்பினையும் விட்டுக்கொடுப்பதற்கு யாரும் முனையவேண்டாம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் குழுக்களின் பிரதிதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சிறிக்காந்தா,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையென்பது சம்பந்தர் அவர்களை மட்டும் தலைமைத்துவம் அல்ல.அதில் மூன்று அங்கத்துவ கட்சிகள் பிரதானமாக இருக்கின்றது.சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாலும்கூட கூட்டுப்பொறுப்பு இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்காமல் கொடுத்த வாக்குறுதியை மீறாமல் நேர்மையுடன் நம்பிக்கையுடன் செயற்பட்டுவருகின்றது.

85வயதிலும் சம்பந்தன் அவர்கள் தனது உடல்நிலையினையும் கருத்தில்கொள்ளாது அரசியலில் உள்ளார் என்பது தயவுசெய்து அவரை விமர்சிப்பவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் தனியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையோ சம்பந்தன் அவர்களோ மாத்திரம் கையாண்டு தீர்வுகாணும் பிரச்சினையில்லை.

இந்த நாடு சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் இந்த பிரச்சினை இருந்துவருகின்றது.புரையோடிப்போயுள்ளது.இந்த பிரச்சினையின் விளைவாக பாரிய யுத்ததினை முழு நாடும் சந்தித்துள்ளது.இந்த பின்னணியில் ஒரு அரசியல் தீர்வினை காணுவது என்பது தென்னிலங்கையில் சிங்கள பௌத்த இனவாதம் என்பது இன்னும் தனது தீவிரத்தினை மட்டுப்படுத்தக்கூட இல்லாத நிலையில் தீவிரம் காணும் நிலையில் அரசியல் தீர்வு என்பது இலகுவானது அல்ல.

இந்த நிலையில் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமைகாணப்படவேண்டும்.தமிழ் மக்களின் பேரால் அரசியல் நடாத்தும் கட்சிகள் ஒற்றுமைப்படவேண்டும்.அந்த ஒற்றுமை இங்கு இல்லை.அனைவரும் கூட்டமைப்பினை கூறைகூறிக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வாக தங்களால் என்ன செய்யமுடியும் என்ன செய்து காட்டமுடியும் என்பதை இதுவரையில் தெரிவிக்கவும் இல்லை,தெரிவிக்க முயற்சித்ததும் இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பாதையில் உறுதியுடன் பயணிக்கும்.எமது தமிழீழ விடுதலை இயக்கம் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கும் வகையிலான அரசியல் தீர்வினை வென்றெடுப்பதற்கு ஏதுவாக தங்களது பங்களிப்பினை வழங்கும்.

அரசியல் தீர்வுத்திட்டம் இழுத்தடிக்கப்படக்கூடாது,இந்தஆண்டுக்குள் அது வழங்கப்படவேண்டும் என நாங்கள் வலியுறுத்திவருகின்றோம்.இந்த முயற்சிகள் தோல்விகாணுமாக இருந்தால்,இந்தஆண்டுக்குள் ஓரு தீர்வினை இந்த சிங்கள தேசியம் வழங்க நடவடிக்கையெடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டாக தீர்மானிக்கும்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாகவுள்ளதாகவும் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனியாக ஆட்சியமைக்கமுடியாத நிலையே கிழக்கில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் நீண்டகால அனுபவம் உள்ளவர்கள்,சிலர் போராட்ட அரசியல் களத்தில் இருந்து ஜனநாயக அரசியல் களத்திற்கு வந்து நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர்களாக உள்ளனர்.எங்களுக்கு எதிராகவுள்ள சவால்களை நாங்கள் அறிவோம்.மக்கள் எங்கள் மீது சுமத்தியுள்ள பொறுப்புகளை நாங்கள் நிறைவேற்றுவோம்.ஒரு அரசியல் தீர்வினைவென்றெடுப்பதில் சிங்கள தரப்பில் இருந்து மட்டுமல்ல தமிழர் தரப்பில் இருந்தும் திரைமறைவில் இருந்து ஏவப்படுகின்ற எதிர்ப்புகளையும் நாங்கள் நன்றாக உணர்ந்துகொண்டுள்ளோம்.ஒரு தீர்வுத்திட்டம் வந்துவிடக்கூடாது என்பதில் தமிழர் தரப்பிலும் சில சுயநல சக்திகள் செயற்பட்டுக்கொண்டுள்ளது.இந்த பின்னணியில் எங்கள் பொறுப்பினை நாங்கள் நிறைவேற்றுவோம்.